இலக்கை அடையும் வரை சமாதானம் இல்லை – பூட்டீன்

உக்ரைன் மீதான படைய நடவடிக்கையின் இலக்கில் மாற்றமில்லை, அதனை அடையும்வரை சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை என ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் கடந்த வியாழக்கிழமை(14) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடம் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தான் ஐந்தாவது தடவையாக போட்டியிடப்போவதாக கடந்த வாரம் அறிவித்துள்ள பூட்டீன்(71) வருட இறுதி கலந்துரையாடலில் கலந்துகொண்டபோது இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமராகவும், அரச தலைவராகவும் நான்கு தடவைகள் ஆட்சியில் இருந்த அவர் அடுத்த வருடம் வெற்றிபெற்றால் 2030 ஆம் ஆண்டு வரையிலும் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனின் நாசி நடவடிக்கைகளை நிறுத்தி, அவர்களின் ஆயுதங்களை களைந்து, நடுநிலமையான நாடாக மாற்றுவதே தமது படை நடவடிக்கையின் நோக்கம் எனவும், அதனை நிறைவேற்றும் வரையில் அமைதி முயற்சிகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் 617000 ரஸ்ய படையினர் தற்போது நிலைகொண்டுள்ளனர். அவர்களில் கடந்த வருடம் இணைத்துக்கொள்ளப்பட்ட 244000 பின்னிருக்கை படையினரும் அடக்கம்.

இதனிடையே, இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் வெலமிடீர் செலன்கிக்கு எதிர்பார்த்த நிதி உதவிகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்புவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.