‘இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச நாள்- இத்துறையில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம்-கலைச்செல்வி

WhatsApp Image 2023 06 29 at 11.29.13 AM 'இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச நாள்- இத்துறையில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம்-கலைச்செல்வி

‘இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச நாள் கடந்த 24ம் திகதி நினைவு கூறப்பட்ட நிலையில், இந்த நாள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு தமிழ் நாட்டின்  ஊடகவியலாளர்  கலைச்செல்வி சரவணன் அவர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி…

கேள்வி-

ராஜதந்திரிகளாக ஏன் பெண்கள் அதிகளவில் உலகில் இல்லை என்று நினைக்கின்றீர்கள்? இதற்கு ஆண் ஆதிக்கம் காரணமாகுமா?

பதில்-

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ,ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் நாள் அன்று  ‘இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினமாக’ குறிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. எதற்கு இந்நாளை கொண்டாட வேண்டும் ?இதன் முக்கியத்துவம் என்ன ?அதுவும் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன் ?போன்ற பல கேள்விகள் நம் மனதில் தோன்றும் .ஆனால் ,இந்நாளை அவ்வளவு சுலபமாக யாரும் கடந்து சென்று விட முடியாது.

முக்கியத்துவம் ஏன் ?

உலகில்  முடியாட்சி வீழ்ந்து ஜனநாயக முறை தோன்றியவுடன் ,இராஜதந்திர உறவுகளின் தேவை அதிகமானது.ஏனெனில் ,அது  ஜனநாயகத்தை நீர்த்துப் போகாமல் செய்வதற்கான கருவியாக இருந்தது.  உலக நாடுகளை ஒன்றிணைக்கவும் ,இணக்கமாக வைத்திருக்கவும் இராஜதந்திரிகளின் தேவையும்  இருக்கிறது. யார் இந்த இராஜதந்திரிகள் ? அயல்நாட்டு தூதுவர்களாகவும் , வெளியுறவுத் துறை செயலாளர்களாகவும் ,மந்திரிகளாகவும் இருப்பவர்கள் .அந்தந்த நாடுகளின் உரிமைகளுக்காகவும்,மக்களுக்காகவும் குரல் கொடுப்பவர்கள்.

பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஆண்களைக் காட்டிலும் இத்துறைகளில் பணிபுரியும் பெண்கள் குறைவாகவே உள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் 28% என்ற அளவிலும் ,கனடாவில் 51%,அமெரிக்காவில் 41% பேர் இருக்கிறார்கள் . ஆப்பிரிக்கா ,ஆசியா , மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் முறையே 20.54%,18%,12%,10% பேர் இராஜதந்திரிகளாக பணிபுரிகிறார்கள்.

ஏன் இந்த வேறுபாடு?ஆணாதிக்கம் காரணமா ?

பெண்கள் இத்துறையில் பணிபுரிய குடும்ப ஒத்துழைப்பும், சமூக அரவணைப்பும் தேவை என்பதே நிதர்சனம்.உண்மையில் ஆண்களை விட பெண்களே இராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர்கள் .எப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையையும் பக்குவமாக கையாள தெரிந்தவர்கள். நம் குடும்பங்களில் கூட பெண்களே பிரதானமானவர்களாக இருப்பர்.உறவுகளிடம் நல்லுறவை பேணுவது,பொருளாதார சிக்கல்களைக் கையாளுவது,தீர்க்கமாக முடிவெடுப்பது என பெண்களின் கைகளே ஓங்கியிருக்கும் சரியான நேரத்தில் ஆக்ரோஷத்தையும் காட்டுவதில் வல்லவர்கள்.

ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் முதல் செயலாளர் சினேகா துபேயின் சீற்றம் நிறைந்த பேச்சை இந்நேரத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ,உலக அரங்கில் காஷ்மீர் பிரச்சனையை தவறாக குறிப்பிட்டபோது ,அந்த நாடு அதன் கொல்லைப்புறத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருகிறது என்று பதிலடி கொடுத்தார் சினேகா துபே.அந்த தன்னம்பிக்கையும்,துணிச்சலும் பலரால் பாராட்டப்பட்டது .

கடந்த  2009 முதல் 2013 வரை ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் 67 வது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய  ஹிலாரி கிளிண்டனின் கூக்குரல்  பெண்களுக்கான பல கதவுகளை திறந்து விட்டதும் மறக்க முடியாதது .மனித உரிமையையும்,பெண்களின் உரிமையையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று முழக்கமிட்டார் .சுமார் 79 நாடுகளுக்கு பயணித்தவர் அவர்.

இப்போது நம் கேள்விக்கான பிரதான விடை கிடைத்து விட்டது என்று கூறலாம்.பெரும்பாலும்,இத்துறையில் ,திறமையின் அடிப்படையில் பாலின பாகுபாடு பார்ப்பதில்லை.

கேள்வி-பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன ?

பதில்-

இத்துறையில் பணியாற்றும்போது ,பல நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டி வரும்.குடும்பம் ,குழந்தைகளைக் கவனிக்க இயலாது. குழந்தைகளின் கல்வியும் தடைபடும்.இதே துறையில் இருப்பவரை திருமணம் செய்தாலும், ஒரே நாட்டில் ,ஒரே இடத்தில் வேலை கிடைப்பது  கடினம் .எனவே,இத்துறையில் சேருவதற்கு பெண்கள் தயங்குகிறார்கள் . .ஒரே ஆண்டுக்குள் எங்கெல்லாம் ,எத்துணை முறை  பணி மாற்றம் செய்தாலும் செல்வதற்கு தயாராக இருக்க வேண்டி வரும்.

அடுத்ததாக ,பெண்களின் பாதுகாப்பும் ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் அமைதியான சூழ்நிலையில் இருக்கும் என்று கருத முடியாது.ஆப்கானிஸ்தான் ,ஈரான் ,ஈராக் ,ஆப்பிரிக்கா போன்றவை எந்நேரமும் பதற்றம் ஏற்படக்கூடிய நிலையில் இருப்பவை.அப்போது,அங்கு பணிபுரிய ஆண்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.இவற்றைக் கையாளுவதில் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை.ஆனால்,இது போன்ற சமயங்களில் பாலின பாகுபாடும், சமூக பார்வையும் மாறுபடுகிறது   என்பதை மறுப்பதற்கில்லை. .

கேள்வி-2-ஏன் இந்தியாவில் இந்திரா காந்திக்கு பின் ஒரு பெண்ணால் பிரதமராக முடியவில்லை?

 பதில்-

இதை தனிப்படட நபரின் திறமையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது .”இந்தியா என்றால் இந்திராகாந்தி ”  என்ற நிலையை உருவாக்கியதற்கு யார் காரணம் ?அவரே தான்.தடைகள் பல வந்தாலும் தகர்த்தெறி வதுதான் ஒரு நல்ல ஆளுமைக்கு அடையாளம்.அதுபோன்ற  ஆளுமைகளை யாரும் தடுக்கவும் முடியாது.அழிக்கவும் முடியாது.

“தந்திர நரி”யா இந்திராகாந்தி ?

அண்டை நாடான பாகிஸ்தானில் ,உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது .அப்போது,பத்து மில்லியன் அளவில் அகதிகளாக அந்நாட்டு மக்கள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களின் பிரச்சனையைத் தீர்க்க பாகிஸ்தான் மீது போர் அறிவித்தார். ஆனால்,அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன்,பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததுடன் ,இந்தியாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார் .ஆனால்,இந்திராதான் இறுதியில் வெற்றி பெற்றார்.மேலும்,நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டு உலக நாடுகளின் அரசியல் ஆதரவைப் பெற்றார் .1971-இல் வங்காள தேசமும் உருவானது. அப்போது,இந்திராவை ரிச்சர்ட் நிக்சன் “தந்திர நரி” என்று இரகசியமாகக் குறிப்பிட்டது பின்னாளில் வெளியானது.

இதுபோன்று,இலங்கையில் நின்று அமெரிக்கா தன்  ஆதிக்கத்தை இந்தியா மேல் காட்டிட முனைந்தது.அப்போது ,இராஜதந்திர முனைப்புடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கவும் ,உதவிடவும் முன் வந்தார் இந்திரா.இதன் மூலம்,இந்தியாவின் கரங்களை உயர்த்த நினைத்தார்.இப்படி பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால்,அதற்குப் பின்,பின்னாட்களில் அவரது மருமகளான சோனியா காந்தியை  பிரதமராக ஏற்றுக் கொள்ள அரசியல் களத்தில் எதிர்ப்பு வலுத்தது. மன்மோகன் சிங்கை முன் வைத்தே அவரால் இயங்க முடிந்தது.ஆனால் ,பத்து வருட காலம்  எதிரிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் சாமர்த்தியமாக கட்சியை தன் கைப்பிடியிலேயே வைத்திருந்தார் சோனியா காந்தி.

ஒரு அரசியல் கட்சியை கட்டி ஆளவும்,அதற்கான ஆதரவுகளை தக்க வைத்துக் கொள்வதும்,இராஜதந்திர செயல்பாடுகள் ,பரந்த அறிவு போன்றவை  மூலம் ஒருவர் பிரதமர் போன்ற பெரிய பதவிக்கு வரலாம். அது  போன்ற ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதே உண்மை.பிற்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது என நம்புவோம்.

‘இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் ‘   மூலம், நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் ஜனநாயகத்தை அடைய முடிவெடுக்கும் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக  பெண்களின் பங்கேற்பு இருப்பது அவசியம் என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப் படுத்தியிருக்கிறது.

இன்று நம் நிலை உயர  இந்த ராஜ தந்திரிகளின்  மதிநுட்பம் நிறைந்த  இராஜதந்திரமே காரணம் என்றால் மிகையில்லை. இனி வரும் காலங்களில் தடைகளை உடைத்து ,சமூக ஒத்துழைப்புடனும் ,புரிதலுடனும் பெண் இராஜதந்திரிகள் அதிக எண்ணிக்கையில் இத்துறைக்கு வர  வேண்டும் .ஜனநாயக வளர்ச்சி ,அமைதி ,நல்லுறவு ,மனித மேம்பாடு போன்றவற்றில் கோலோச்ச வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .