இந்திய ரூபா இலங்கையில் நடைமுறைக்கு வருவதை எதிா்ப்போம் – சரத் வீரசேகர திட்டவட்டம்

இந்தியாவின் ரூபாவை இலங்கையில் பாவிப்பதற்கும், இந்தியாவின் 29ஆவது மாநிலமாக இலங்கையை அடையாளப்படுத்துவதற்கும் நாட்டின் முக்கிய கேந்திர மையங்களான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவது எடுக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை. மிகக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பியுமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது ஓரளவு மீண்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் வெற்றி பெற்றுள்ளது என்பதையும், மக்களுக்கு பெரும்
தடையாக இருந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு சாதகமான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் ரூபாவை இலங்கையில் பாவிப்பதற்கும், இந்தியாவின்
29ஆவது மாநிலமாக அடையாளப்படுத்துவதற்கும், நாட்டின் முக்கிய கேந்திர மையங்களாக உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் எடுக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை. கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதிப்பு நேரடியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்” என்றார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திட விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 44 இலட்சம் பேர் தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அதேபோல் 2 இலட்சம் வைத்தியர்களும், 15 இலட்சம் பொறியியலாளர்களும் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். ‘எட்கா’ ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டு இவர்களுக்கு இலங்கையின் தொழிற்றுறைகளை வழங்கினால் இலங்கையின் இளைஞர், யுவதிகளின் நிலை என்னவென்றும் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்