இந்தியா செல்ல முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கூட்டமைப்பினர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடில்லி செல்வதற்கு முன்னதாக இனப்பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் நடத்தக் கோருவதற்குத் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றில் நேற்று கூட இருந்த பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானத்தை முன்வைக்க இருப்பதாகவும் திரு சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக உள்ளதாக அரச தரப்பினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் இல்லாது போய் பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்னமும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.

இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் இது பற்றி கலந்துரையாடவுள்ளோம் என்றும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், க.கோடீஸ்வரன் தவிர்ந்த ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சமுகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.