இந்தியா – ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம்: லாவோஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கருத்து

உலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா – ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, புருனே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இந்தியா – ஆசியான் அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில், கிழக்கு ஆசிய கொள்கையை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன். அது இந்தியா – ஆசியான் நாடுகள்இடையே புதிய சக்தி, உத்வேகம் மற்றும் வரலாற்று உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – ஆசியான் நாடுகள் இடையே வர்த்தகம் 2 மடங்காக அதிகரித்து 130 பில்லியன்  டொலரைதாண்டியுள்ளது. 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நூற்றாண்டு. போரையும், பதற்றத்தையும் உலகம் சந்தித்து வரும் சூழலில், இந்தியா – ஆசியான் நாடுகளின் நட்பு, ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மிக முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.