இந்தியாவின் உதவியுடன் மாலத்தீவில் UPI பண பரிவர்த்தனை அறிமுகம்

இந்தியா உருவாக்கிய UPI கட்டமைப்பை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.

நாட்டின் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் இந்திய அரசு UPI கட்டமைப்பை உருவாக்கியது. 2016-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த UPI , நாட்டின் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை, சாலையோர கடைகள் வரை பிரதானமாக UPI மூலமே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளிலும் UPI மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதுவரை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் UPI மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில், UPI தொடர்பாக இந்தியா – மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் UPI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.