”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா!

”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இறந்தவர்களை அடையாளம் காண உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, காயமடைந்தவர்கள் குணமாகத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம்  ”30 நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.”  என  விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்  தெரிவித்துள்ளார்.

”ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சுமார் 30 விநாடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் விபத்துக்குள்ளானது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபரான 40 வயதான விஸ்வாஸ் குமார்.

”நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன. எனக்குப் பயமாக இருந்தது. நான் வெளியேறியபோது, என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் கிடந்தன.” எனத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் அஜய்யும் தன்னுடன் பயணித்ததாக தெரிவித்துள்ள விஸ்வாஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் இந்தியரான விஸ்வாஸ் விடுமுறைக்கு அகமதாபாத் வந்து திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.