இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது

கொரோனா காரணமாக 2020 ஜனவரி இறுதியில் சீனாவில் பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாகப் பரவும் நாடுகள் தொடர்ந்து கல்வி நிறுவனங்களை மூடுவதாக அறிவித்தன.

உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. அதில் கோவிட் 19 என்ற வைரஸ் தற்பொழுது பாடசாலை மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கல்விப் பொதுதர தாரதர உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகது.

தற்பொழுது இணையவழி கற்பித்தல் முறை பரவலாகி வருகின்றது. இணையதளம் மூலம் கல்வி கற்பது புதிய போக்காக உருவெடுத்து இருக்கலாம். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இது எப்படிப்பட்டதாக இருக்கும்? கொரோனா ஊரடங்கால் இணையவழிக் கல்வி என்ற புதிய கல்வி முறை அவதாரம் எடுத்துள்ளது. தொழில்நுட்ப வசதி இல்லாத பின்தங்கிய பின்னணியைக் கொண்ட குழந்தைகள் முழுக்க முழுக்க பள்ளிகளையும், ஆசிரியர்களையும் நம்பியுள்ளனர். வீட்டில் இணைய வசதி இல்லாமல் நூலகங்களை நம்பியிருந்த மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

PHOTO 2021 03 22 10 15 37 இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது

கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைப்படக் கூடாது என்பதற்காக இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் இணைய வழிக் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. கல்வி முறையாக படிப்படியாக மாறிவருகிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருக்கின்றது. இணையவழி முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும்.

PHOTO 2021 03 22 10 16 05 இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது

கைத்தொலைபேசி, கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். கைத்தொலைபேசி, கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக் கொள்வார்கள் என்று விட்டு விடக் கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது இணையவழி முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். 27% மாணவர்களிடம் திறன்பேசி (smart phone), மடிக் கணினி இல்லை!

இணையவழிக் கற்றலில் திறன்பேசி, மடிக்கணினி, மற்றும் மின்சாரம் இல்லாமை தடையாக காணப்படும். தொழில்நுட்ப சாதனங்களை கல்வி கற்பதற்காக திறம்பட பயன்படுத்துவதற்கான புரிதல் இல்லாதது மற்றும் இணையவழி பயிற்றுவித்தலில் ஆசிரியர்களுக்கு போதிய பரீட்சியம் இல்லாதது ஆகியவை இணைய கற்றல் முறையில் தடையாக காணப்படும். இணையவழி மூலம் கற்றுக்கொள்ள கடினமான பாடமாக கணிதம் இருப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் வழி காட்டுதலின் கீழ் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளக் கூடிய சோதனைகள் என்பன கடினமாக காணப்படும்.

PHOTO 2021 03 22 10 15 40 இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது

தற்போதைய சூழலில் இணையவழிக் கல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்தக் கல்விமுறை ஆசிரியர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி புதிய முறைதான். இரண்டு பக்கத்திலும் தடுமாற்றங்கள் உண்டு. நடுத்தர வயது ஆசிரியர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் புதிது. ஆசிரியர்களும் இணையவழி பாடம் நடத்த பழக வேண்டி உள்ளது. பிறந்த சில மாதங்களிலேயே இக்கால குழந்தைகள் கைத்தொலை பேசியை இயக்க பழகிவிடுவதால், இக்கால மாணவர்களுக்கு எளிதுதானே இணைய வழிக் கல்வி என்று நினைக்கலாம். ஆனால், அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

படித்த பெற்றோரே இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள், அந்த செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று மாற்றி மாற்றி பள்ளிகள், கல்லூரிகள் கூறும்போது குழம்பித்தான் போய்விடுகிறார்கள். பள்ளிப்படிப்பைத் தாண்டாத பெற்றோர்கள், படிக்காத பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு கைத்தொலைபேசியில் செயலியை பதிவிறக்கம் செய்வது, பள்ளி, கல்லூரிகளில் பாடத்திற்கேற்ப அவ்வப்போது அனுப்பும் இணைப்புகளுள் நுழைவது போன்றவை சவாலான காரியமாகத்தான் உள்ளது.

அதிக நேரம் திரையைப் பார்ப்பதால் மாணவர்களின் கண்கள், காதுகள் பாதிப்படைவது, தலைவலி, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என்பதால் யாரும் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை. மாணவர்கள் ஆடியோ, வீடியோவை மியூட் செய்து விடுவதால் மாணவர்கள் கவனிக்கிறார்களா என்று ஆசிரியர்களுக்குத் தெரியாது.

எப்படியும் பிள்ளைகள் தொலைக்காட்சி அல்லது கைத்தொலைபேசியில் தான் இருக்கப் போகின்றார்கள் அதற்கு இப்படி இணையவழி பாடம் படிப்பதை வரப்பிரசாதமாகவே கருதும் பெற்றோர்களும் உள்ளனர். இதுவரை பள்ளிக்கு சென்று மட்டுமே படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள், ஆசிரியர் முன் தன்னுடைய கவனத்தை வைத்திருந்த பிள்ளைகள், இன்று நம் கணினியின் திரைமுன் தன்னுடைய கவனத்தை வைக்க வேண்டியிருக்கிறது. இக் கல்விமுறை ஒரு சாராருக்கு மட்டுமே சென்றடைகிறது. கிராமப்புற மாணவர்களுக்கானமுக்கிய வாய்ப்புகள் தடைபடுகின்றது.

சில பெற்றோர்கள் வகுப்பில் பாடம் நடக்கும் பொழுது, தன் பிள்ளைகள் அதை கவனிக்கிறார்களா? என்று பார்ப்பதற்காக அந்த கணினியின் பின்புறமோ அல்லது அருகிலோ அமர்ந்திருக்கிறார்கள். இது ஆசிரியர்களுக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது.

இந்தக் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஒரே வழி இணைய வழி வகுப்புகளே. ஆசிரியர் நேருக்கு நேர் பாடம் எடுக்கும் அளவிற்கு இணைய வழி வகுப்புகள் திறன் வாய்ந்ததாக இருக்காது என்றாலும், தற்போதைய நிலைக்கு இது சிறந்த வழியே ஆகும். காலத்திற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. அனைவரும் தொழில்நுட்ப மாற்றத்துக்கு மாறித் தான் ஆக வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உ.டனன்சியா

முகாமைத்துவபீடம்

யாழ்பல்கலைக்க்கழகம்