இணக்க, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலின் விளைவு என்ன? – பரணி கிருஸ்ணரஜனி

 24 யூலை 2001 அதிகாலை பதினான்கு கரும்புலிகள் கட்டுநாயக்கா  வான் படைத்தளத்தை ஊடறுத்துப் புகுந்தார்கள். பிறகு அங்கு அவர்கள் பதினான்கு பேரும் எழுதியது ஒரு இனத்தின் அடங்காமையை, துணிச்சலை, வீரத்தை.mஒரு இனத்தின் ஒட்டு மொத்த சினமாக அங்கிருந்த வான்கலங்கள் மீது மோதி வெடித்தார்கள். முழு உலகமுமே புலிகளைப் பார்த்துப் பிரமித்த நாள் அது. படைவலுச்சமநிலை புலிகள் பக்கம் திரும்பக் காரணமாக இருந்ததும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் மீது மேற்குலகம் வலுக்கட்டாயமாகத் திணிப் பதற்குக் காரணமாக இருந்ததுமான தாக்குதல் என்று வரலாற்றாய்வாளர்களும் இராணுவ வல்லுனர்களும் பதிவு செய்த தாக்குதல் இது.

உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தாக்குதல் நெறிப்படுத்தப்பட வெறும் பதினான்கு புலிகள் செய்த சாதனை அது. இங்கு நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது. வெறும் பதினான்கு போராளிகள் அன்று தீவின் படைத்துறை, அரசியல், பொருண்மிய காரணிகளை தீர்மானிக்கும் வல்லமையை தமதாக்கிக் கொண்டார்கள் என்பதே அது. எனவே எம்மிடம் இருக்கும் போர்க்குணத்தை யும், வீரத்தையும் தொடர்ந்து பேணுவது அவசியம். ஏனென்றால் இன்றைய உலக ஒழுங்கு என்பது பலமுள்ளவன் பக்கம் சாயும் தன்மை கொண்டது மட்டுமல்ல நாம் தொடர்ந்து வீழ்ந்து கிடப்பது எதிரி எம்மை தொடர்ந்து அழிக்க உதவுமே ஒழிய எம்மைத் தற்காக்க உதவாது.

“சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும்” என்கிறார் சாணக்கியர். “தகுதியுள்ளவை உயிர்வாழும்” என்கிறார் டார்வின். இதையே சிக்மன்ட் ப்ராய்ட் வேறு ஒரு மொழியில் சொல்கிறார்” தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும்”. அரசு என்ற போர்வையில் பேரழிவு ஆயுதங்களு டன், அதி நவீன விஞ்ஞான- தொழில்நுட்ப – புலனாய்வு வலையமைப்புக்களுடன், நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புசார் சிந்தனை குழாம்களின் லொபிகளால் சுற்றி வளைக்கப்பட்டு வேட்டையாடப்படும் தேசிய இனங்களின் போராட்டத்தில் உயிர்க் கொடை (கரும் புலிகள்) என்பது தவிர்க்க முடியாத ஒரு வகிபாகத்தைக் கொண்டது என்பதை ‘நந்திக்கடல்’ அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.

அதனால்தான் பலவீனமான தேசிய இனங்களின் பலம் மிக்க இந்த அதி மனிதர்களை தத்துவப்படுத்தி மறு அறிமுகம் செய்கிறது ‘நந்திக்கடல்’. நாம் அடிக்கத் தேவையில்லை – ஆனால் எல்லை மீறிப் போனால் ஒரு கட்டத்தில் மீளத் திருப்பி அடிப்போம் என்ற அச்ச உளவியலை எதிரிக்குள் விதைப்பதனூடாகவே நாம் எம்மைத் தற்காத்துக் கொள்ளவும், பேரம் பேசவும் முடியும். அதை விடுத்து தற்போது நமது தமிழ் அரசியல் வாதிகள் செய்வது போல் இணக்க, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல் செய்தால் இருக்கிற கோவணமும் பறி போய்விடும். யூலை மாதத்தின் குறிப்பாக இன்றைய நாளின் செய்தி இதுதான்.