ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்கில் மீறப்படும் தனிமைப்படுத்தல் சட்டங்கள்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்கில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்படுவது குறித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலையையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின், இறுதிச் சடங்குகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டு உதாசீனப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா தொற்று பரவும் ஆபத்து ஏற்படக் கூடும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், தற்போதும் உயிர்ப்புடன் உள்ள கொரோனா தொற்று மையங்களான, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் கடற்படையினரைச் சரியாக கையாளாமல்போனால், நாட்டில் இரண்டாவது கொரானா அலை வீசும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.