ஆந்திராவில் மர்ம நோய் – பாதிக்கப்பட்டவர்களி இரத்த மாதிரியில் ஈயம், நிக்கல் துகள்கள்

ஆந்திர மாநிலத்தில் ஏலூரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில்  ஈயம் மற்றும் நிக்கல் துகல்கள் இருப்பது முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில் கடந்த சனிக்கிழமை இரவு முதல்  பொதுமக்கள் வாந்தி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு என பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று இரவு மட்டும் 83 பேர் பாதிக்கப்பட்டு ஏலூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ததில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்தனர். காற்று அல்லது தண்ணீர் மூலம் நோய் பரவுகிறதா என கண்டறிய ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நேற்று 443 பேர் ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்ம நோய்க்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இரத்தம் சேகரித்து, பரிசோதனை செய்து வருகின்றனர். டெல்லியிலிருந்து 9 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் ஏலூரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில் ஈயம் மற்றும் நிக்கல் துகல்கள் இருப்பது முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாதிரிகள் இந்திய இரசாயன ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தவுடன் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்படும் எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.