இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந் தையைப் போல், நம் மனத்திலிருந்து அகல மறுக்கும் கவிதைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படியொரு கவிதை, ஈழத்துக் கவிஞர் நித்தியானந்தனின் கவிதை.
பொய்க்காலுடன் ஒருவன்
முன்னே போகிறான்…
இரண்டு கைகளும் இழந்த தோழி அதோ..
பக்கத்தே பாருங்கள் –
நான்கு பிள்ளைகளையும்
வேள்விக்கு இரையாக்கி
நொய்ந்து கிடக்கும் ஒரு தாய்.
வேரிழந்து விழுதுகளிழந்த ஒரு தந்தை
அந்தோ… கச்சான் விற்கிறார்.
ஊன் உயிர் அனைத்தையும்
விடுதலைக்குக் கொடுத்த ஒரு சமூகம்
வதங்கிக் கிடக்கிறது…
யதார்த்தம் இதயத்தைக் கிழிக்க, படிக்கத் தொடங்கியவுடனேயே கண்களை நனைத்து விடுகிற இந்தக் கவிதை, இத்துடன் முடிந்து விடவில்லை. விழிகளில் கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறபோதே, நமது இரண்டு கன்னத் திலும் ஓங்கி அறைகிறது, கவிதையின் கடைசி வரி.
‘தழும்பு சுமந்தவர்களுக்குத் தாழ்வு
கொழும்பு சுமந்தவர்களுக்கு வாழ்வு’
என்று, கவிதையை முடிக்கிற இடத்தில் நம்மைக் கொதிக்க வைக்கிறார், நித்தியானந்தன். தனது கண்ணீராலேயே அவர் எழுதிய கவிதை இது! அந்தக் கண்ணீர் சுடுகின்றது.
ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை விடுதலை வேள்விக்கு அர்ப்பணித்த ஒரு ஈழத்துத் தாயை, ஈழத் தாய்மண்ணில் தரிசித்த நினைவு, இப்போது கூட நெகிழச் செய்கிறது என்னை!
அந்தத் தாயைப் பார்க்க விரும்பியதும், தோழர்கள் என்னை அங்கே அழைத்துச் சென் றார்கள். நாங்கள் சென்றபோது, அந்த எளிய வீட்டின் எதிர்ப்புறம் வீழ்ந்து கிடந்த அடிமரம் ஒன்றின் மீது, அந்த வீரத்தாய் அமர்ந்திருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியதும், அவரின் தாள் தொழுது வணங்கினேன்.
அந்தத் தாயுடன் சேர்ந்தே வீட்டை நெருங்கி னோம். IN, OUTபாணியில் உள்ளே நுழைய இரண்டு பாதைகள். என்னை அழைத்துச் சென்ற தோழர்கள், என்ன நடந்ததென்று விவரித்தபோது அதிர்ந்து போனேன்.
சிங்களப் படையுடனான மோதல் ஒன்றில், மூத்த மகன் உயிரிழக்கிறான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, அவனது வித்துடல், தாய்வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. உற்றார், உறவினர் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின், அந்த வீரனின் உடல், பொதுமக்களும், புலிகளும் வீரவணக்கம் செலுத்துவதற்காக, பொது இடத்தில் வைக்கப்படுவது வழக்கம். அந்த மூத்த மகனின் உடல், உற்றார் உறவினரின் அஞ்சலிக்குப் பிறகு, பொது இடத்தில் வைப்பதற்காக இரண்டு வெளி வாசல்களில் ஒன்றின் வழியாக வெளியே எடுத்துச் செல்லப்பட்ட அதே கணத்தில், இன் னொரு வாயிலில் நுழைகிறது, களத்தில் பலியான இளைய மகனின் திருவுடல்.
தோழர்கள் விவரித்தபோது, அந்தக் கொடும் துயர்க்காட்சி மனக் கண்ணில் விரிய, நிலைகுலைந்து நின்றேன்.
எந்த சங்க இலக்கியத்திலும், ஏன், எந்த உலக இலக்கியத்திலும், இப்படியொரு காட்சி எழுதப்பட்டிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன் நான். இப்படியொரு ஒரிஜினல் இலக்கியத்தைப் படைத்தது, எங்கள் தமிழீழத் தாய் மண் தான்!
அந்தத் தாயின் கைகளை நான் நெகிழ்ச்சி யோடு பற்றியதும், ஒரு மெளனப் புன்னகையுடன் அந்த வீரத்தாய் என்னைப் பார்த்ததும், நெஞ்சை விட்டு நீங்காத அழுத்தமான பதிவு. அப்படியொரு தாயைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஆகப் பெரிய வரம்.
நித்தியானந்தனின் கவிதையையும், அந்த வீரத்தாயைச் சந்தித்த நிகழ்வையும், ஒருசேர நினைத்துப் பார்க்கையில், உடலின் ஒவ்வொரு நரம்பும் சிலிர்க்கிறது. இரண்டு மாவீரர்களைத் தம் தாய் மண்ணுக்கு அர்ப்பணித்த தாய்மார்கள், தந்தைமார் கள், இன்னும் பல பேர் இருப்பார்கள். அவர்கள் இருக்கும்போதே, தமிழீழ விடுதலையை வென் றெடுப்பதுதான், அந்த வீரப் பெற்றோருக்கு நாம் செலுத்துகிற உண்மையான நன்றிக் கடனாக இருக்கும். இதை உணர்ச்சி பொங்க என்னிடம் சொன்னவர், சகோதரி தமிழினி.
தமிழினியை உங்களைப் போலவே நானும் மறக்கவில்லை. அவரைப் பற்றிய வதந்திகளையெல்லாம் பொசுக்குகிறது அவரது அர்ப்பணிப்பு. மறுவாழ்வு முகாம் கொடுமைகளால் உடல் நலிந்து உயிரிழந்த அவரது உடல் வெளியே எடுத்து வரப்பட்டபோது, ‘இயக்கம் இருந்திருந்தால் எப்படி எடுத்திருப்பாங்க’ என்று, அவரது தாய்வழி உறவுகள் கண்ணீருடன் கதைத் ததைக் கேள்விப்பட்டபோது, இதயம் கனத்தது. மரத்துப்போகாத மனோதிடத்துடன் இருந்தவர்கள் அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டது ஆறுதலாக இருந்தது. தமிழீழக் காற்றோடு காற்றாக கரைந்து போனது தமிழினியின் கனவு.
அதைப்போலவே ‘அபித’ கப்பலைத் தனி ஒருத்தியாகத் தகர்த்த பெண் வேங்கை அங்கயற் கண்ணியின் உயிரும் உடலும் காங்கேசன் துறை சமுத்திரத்தின் காற்றோடு காற்றாகக் கலந்து விட்டது. அங்கு வீசும் காற்றில் இப்போது கூட கேட்டுக் கொண்டிருக்கிறது, ‘நான் காத்தோடு காத்தாய்ப் போயிடுவேன் அம்மா’ என்று, தன் தாயிடம் கயல் சொன்ன கடைசி வார்த்தைகள்.
தாயிடம் சொன்னதைக் காட்டிலும், தோழிகளிடம் அவள் சொன்னது, ஈடு இணையற்ற வரலாறு.
கயல் என்கிற அங்கயற்கண்ணி, கரும்புலித் தாக்குதலுக்காக தனக்குத் தரப்படுகிற வாய்ப்பு, நல்லூர்க்கோயில் திருவிழாக் காலமாக இருக்க வேண்டுமென்று விரும்பினாள். ஏன் என்று கேட்ட தோழிகளிடம் கயல் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தைப் பிழிகிற இலக்கியம். புறநானூறுகளெல்லாம் பேசாத ஒன்றை, தமிழீழ மண்ணின் பெண்ணரசி கயல் பேசிய வரலாறு.
கயலின் குடும்பம், எளிய குடும்பம். நல்லூர் கோயில் திருவிழாவில் கச்சான் விற்பாள் கயலின் தாய். அது, நாலைந்து மாதம் குடும்பச் செலவுக்குப் பேருதவியாக இருக்கும். நாலு காசு கையிலிருக்கும்.
தன்னிடம் கேள்வி கேட்ட தோழிகளிடம் கயல் சொன்னாள்: ‘அடுத்த வருஷம் இதே நாளில் அம்மாவைப் பார்த்து ஆறுதல் சொல்ல நீங்கள் என் வீட்டுக்குப் போவீர்கள் தானே… வீடு தேடிப் போகிற என் தோழிகளுக்கு, அம்மா, வாய்க்கு ருசியா சமைச்சுப் போட வேண்டாமா? அதுக்கு, அவங்க கையில் நாலு காசு இருக்கணும் இல்லையா… நல்லூர் கோயில் திருவிழா சமயத்துல தான் அது முடியும்… அதனாலதான், திருவிழா நாளில் எனக்கான வாய்ப்பு கிடைக்கணும்னு நினைக்கிறேன்!’
கயல் என்ற அந்த பீனிக்ஸ் பறவை, போர் இலக்கியங்கள் எழுதாத ஒரு இணையற்ற வீரத்தைப் பேசுகிறது. தாய் மண்ணுக்காகச் செத்து விடுவாளாம் அவள்… அதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படமாட்டாளாம்… துக்கம் விசாரிக்க வருகிற தோழிகளுக்கு வாய்க்கு ருசியாக அம்மா சமைத்துப் போட வேண்டுமாம்.. இதைப்பற்றி மட்டும்தான் கவலைப்படுவாளாம்… எப்படியொரு மனசு அந்தப்பெண் வேங்கைக்கு!
கயல்….
நீ கரும்புலி மட்டுமல்ல…
உலகின் ஈடு இணையற்ற சிருஷ்டி!
நீ
காற்றோடு காற்றாகப்
போயிருக்கலாம் தாயே!
ஆனால்
தமிழீழ மண்ணை
சுதந்திரக் காற்று தழுவுகிறபோது
அந்தக் காற்றோடு காற்றாய்
நிச்சயம் நீ திரும்பி வருவாய்!
வருவாய்க்காக மட்டுமே
வெறும் வாயோடு உலவுகிற
வாய்ப்பேச்சு வீரர்கள்,
விடுதலைக்காற்றாய்
நீ உயிர்த்தெழும்போது
தலைமறைவாகிவிடுவார்கள்!
‘தழும்பு சுமந்தவர்களுக்குத் தாழ்வு
கொழும்பு சுமந்தவர்களுக்கு வாழ்வு’
என்கிற நித்தியானந்தனின் கண்ணீர்க் கவிதையை, காற்றோடு காற்றாய் விடுதலையைத் தவழவிடும் எங்கள் மாவீரர்களின் மூச்சுக்காற்று நிச்சயமாகத் திருத்தி எழுதும்! யாருக்குத் தாழ்வு, யாருக்கு வாழ்வு என்பது அப்போது தெரிய வரும்.



