அவன்ட் கார்ட் ஆயுதக்கப்பல் தொடர்பான வழக்கில் கோத்தபயா உட்பட 7 பேரும் விடுதலை

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ உட்பட 7பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபயா ராஜபக்ஸ உட்பட 8பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கானது கடந்த 20ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது இன்றைய தினம் (23) வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது கடந்த 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றானது, நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறைபாடுடையதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் கோத்தபயா உட்பட சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் கோரினர்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றின் குறித்த தீர்ப்பின் பிரதி, நீதவான் நீதிமன்றிற்கு கிடைக்கவில்லை என சுட்டிக்கட்டிய மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க, வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு (இன்று) ஒத்தி வைத்ததுடன்,  மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பின் பிரதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் பதிவாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ, முன்னாள் மேலதிக பாதுகாப்பு செயலர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன, இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் வடுகே பாலித்த பியசிறி பெர்னான்டோ, கருணாரத்ன பண்டா எகொடவல, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சோமதிலக திஸநாயக்க, அவன்கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜயநாத் குமாரசிறி கொலம்பகே, முன்னாள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரான்சிஸ் டயஸ் ஜயரத்ன பெரேரா ஆகியோருக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் அவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனத்திற்கு, மிதமிஞ்சிய சலுகை, சட்டவிரோதமான பிரதிபலன் அல்லது அனுசரணை அல்லது அனுகூலம் ஒன்றினை பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டு அல்லது அவ்வாறு இடம்பெறும் என அறிந்திருந்தும் குறித்த நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை அமைக்க அனுமதி கொடுத்ததனால் ஊழல் எனும் குற்றத்தைப் புரிந்தமை அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உட்பட்ட குற்றச்சாட்டுக்களே இந்த 8பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டிருந்தன.