அரச படைகளின் அட்டூழியங்களுக்குக் கிடைத்த பதில்தான் மனித குண்டுகள்; விக்கி

“அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. தேசிய தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு இலக்குகளாக மாறுமுன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள். ஒரு தரப்பினரை பயங்கரவாதிகள் என்று கூறு முன் மறுதரப்பு இழைத்தகுற்றங்களை பாருங்கள். அவர்கள்தான் மிகப் பெரிய பயங்கரவாதிகள்” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

“புலிகளை அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பயங்கரவாத இயக்கமாகவே தரப்படுத்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையை உருவாக்கினார்கள். பெண்களை மனித குண்டுகளாக மாற்றினர். சிறுவர்களைப் போர் வீரர்கள் ஆக்கினர். இரு தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரை கொலை செய்தனர்” என்று குறிப்பிட்டு அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் கூறியவை வருமாறு:-

“கெப்பட்டிபொல திசாவயை பிரிட்டிஷார் ஆபத்தான கிரிமினல் என்று தரப்படுத்தினார்கள். ஆனால் நாம் அவரை தேசிய ஹீரோவாக கருதுகிறோம். ஏன்? பிரிட்டிஷார் நாட்டுக்குள்ளே நுழைந்தவர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள், எமது வளங்களை சூறையாடியவர்கள், எமது வணக்கத் தலங்களை அழித்தவர்கள், எமது காணிகளைக் கைப்பற்றியவர்கள். எனவே கெப்பெட்டிபொல உயர் குடியை சேர்ந்தவராக இருந்த போதும் ஊவா கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டார்.

அவரை நாம் ஹீரோ என்கிறோம். ஆனால் ‘பயங்கரவாதி’ என்ற சொல்லின் அர்த்தம் பிரிட்டிஷாருக்கு தெரிந்திருந்தால் அவர்கள் கெப்பிட்டிபொலவை அவ்வாறுதான் அழைத்திருப்பார்கள்.

புலிகள் இயக்கத்தில் சிறந்த அறிவுசாலிகள் இருந்தனர். படிப்பை தொடரமுடிந்திருந்தால் அவர்கள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள். பிரபாகரனை மாற்றியது எது? 1958 இல் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளே சிறுவனாக இருந்த பிரபாகரனின் மனதை மாற்றின. அதன் பிறகும் சிங்கள பெரும்பான்மையினரால் இழைக்கப்பட்ட பல கொடுமைகளைக் கேள்வியுற்ற பிரபாகரன் வன்முறைப் பதிலே இதற்கு தகுந்த தேவை என நம்பினார்.

1961 அளவில் இராணுவம் வடக்குக்கு அனுப்பப்பட்டது. கேர்ணல் உடுகமவின் கீழ் என்று நினைக்கிறேன். அப்போதைய அரசாங்கங்கள் செய்த தவறுகளுக்கு அமைதியாக தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தமைக்காகவே இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. அரசாங்கத்தின் கைக்கூலியாக அப்போது இயங்கிய பஸ்தியாம் பிள்ளையை புலிகள் கொன்றனர்.

அமெரிக்காவை விட்டு விடுங்கள். அரசாங்கமல்லவா, சட்ட மா அதிபர் அல்லவா இவ்வாறு பயங்கரவாதி என்று தரப்படுத்தியது? அரசாங்கம் இவ்வாறு கூறியதை பின்பற்றியே வெளிநாடுகளும் வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்தன. புலிகள் இழைத்த தவறுகளைப் பற்றி கூறுகிறீர்களே. அரசாங்கமும் அரச படைகளும் இழைத்த தவறுகளை மறந்து விட்டுப் பேசுகிறீர்கள்.

அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனிதகுண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. தேசிய தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு இலக்குகளாக மாறுமுன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள். ஒரு தரப்பினரை பயங்கரவாதிகள் என்று கூறு முன் மறுதரப்பு இழைத்தகுற்றங்களை பாருங்கள். அவர்கள்தான் மிகப் பெரிய பயங்கரவாதிகள்” என்று கூறினார் விக்னேஸ்வரன்.