அரசியல் ரீதியான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் – ஒக்லன்ட் நிறுவன நிகழ்வில் விக்கி

“சர்வதேச சமூகம், இலங்கை விடயத்தில் இனிமேலும் அரசியல் ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றாமல் மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் சபை ஆணையாளர் பச்லட் அம்மையாரின் அறிக்கை அத்தகைய மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது, மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூஜ்ய அறிக்கை அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருக்கின்றது”

இவ்வாறு குற்றஞ்சாட்டியிருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன். அமெரிக்காவிலுள்ள ஒக்லன்ட் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்ட “Endless War – The destroyed Land, Life and Identity of the Tamils in Sri Lanka” என்ற ஆவணத்தின் வெளியீடு மெய்நிகர் நிகழ்வாக யாழ் ஊடக மையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இன்று நாம் அறிமுகப்படுத்தும் அறிக்கை மிகவும் முக்கியமானது. ஐ. நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் எத்தகைய தீர்மானம் கொண்டுவருவது என்று உறுப்பு நாடுகள் ஆராய்ந்துவரும் வேளையில் இந்த அறிக்கை வெளிவந்திருப்பது மிகவும் பொருத்தமானது.

தமிழ் மக்கள் தமது பூர்வீக இடங்களில் எந்தளவுக்கு தமது நிலங்கள், பாரம்பரிய வாழ்வு முறை, அடையாளம் என்பவற்றை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை ஆதாரபூர்வமாக முழு உலகத்துக்கும் மட்டுமன்றி எமது மக்களுக்கும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது. ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நாடுகளின் கண்களை இந்த அறிக்கை திறக்கும் என்று நான் நம்புகின்றேன். அதேபோல, எமது மக்களின் கண்களையும் இந்த அறிக்கை திறந்துவிட்டிருக்கின்றது. இந்த அறிக்கையைத் தமிழிலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்து நாம் விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

தமது நிலங்கள் பறிபோகின்றன, புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன, தமது வாழ்வாதாரம் சுரண்டப்படுகின்றது என்று தமிழ் மக்கள் கடந்த 12 வருடங்களாக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் நடத்தி வந்துள்ளார்கள். ஆனால், அவற்றை சர்வதேச சமூகம் கவனத்தில் கொண்டு காத்திரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்கவில்லை. இதனால் தான் இன்று நிலைமை இந்தளவுக்கு மோசம் அடைந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் நூற்றாண்டுகால பழமைவாய்ந்த வணக்கஸ்தலங்களை வலிகாமம் வடக்கில் இடித்து தரைமட்டம் ஆக்கி அவற்றின் மீது இராணுவ மாளிகைகளை கட்டும் அளவுக்கு இராணுவம் இன்று செயற்படுகின்றது என்றால் அதற்கு சர்வதேச சமூகத்தின் பரா முகமே காரணமாகும். அதேபோல முல்லைத்தீவில் மிகவும் பாரதூரமான அளவில் இராணுவமயமாக்கலும், பௌத்தமயமாக்கலும் நடைபெறுவதை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகின்றது. 100 க்கும் மேற்பட்ட முகாம்கள் முல்லைத்தீவில் இருப்பதும், 67 விகாரைகள் யுத்தம் முடிவடைந்த பின்னர் கட்டப்பட்டிருப்பதும் நாம் எத்தகைய அடக்குமுறைக்குள் வாழ்கின்றோம் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

ஆகவே, சர்வதேச சமூகம், இலங்கை விடயத்தில் இனிமேலும் அரசியல் ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றாமல் மனித உரிமைகள் அடிப்படையிலான (ர்ரஅயn சுiபாவள டீயளநன யிpசழயஉh) ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் சபை ஆணையாளர் பச்லட் அம்மையார் அவர்களின் அறிக்கை அத்தகைய மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது, மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூஜ்ய அறிக்கை அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருப்பதே பாதிப்புக்குக் காரணமாகியுள்ளது.

இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன. ஆனால் எமக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய பல்வேறு மனித உரிமை மீறல்கள் இங்கே வடக்குக் கிழக்கில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கொள்ள இடமிருக்கின்றது. இவை வெளியே தெரியாமல் நடைபெறுகின்றன என்று கருத முடியும். குறிப்பாக, வலி வடக்கில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் மேலும் எத்தனை கோவில்களும், தேவாலயங்களும், பாடசாலைகளும் தரைமட்டம் ஆக்கப்பட்டு, இராணுவ மாளிகைகளும், முகாம்களும் அவற்றின் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளனவோ எமக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியாது. அதனால்த் தான் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

அனுராதா மிட்டால் வெளியிட்டிருக்கும் நுனெடநளள றுயச என்ற இந்த அறிக்கை, அத்தகைய ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இனியாவது உலக சமூகம் இங்கு, எமது வடக்குக் கிழக்கில், நடக்கும் விடயங்களைத் தமது கண்களைத் திறந்து பார்த்து, அவற்றை அவர்தம் கருத்தில் எடுத்து, உரிய அவசர நடவடிக்கைகளை எடுப்பார்களாக” எனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.