அரசியல் கைதிகள் விவகாரம்: சட்ட நடவடிக்கை என்பது காலம் கடத்துவதோ? நீதிமன்றச் செயற்பாடும் அதுதானோ? – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்களா, இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகி உள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை.

ஆனால், இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள்; அவர்களுடன் சேர்ந்து பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பதே இவர்கள் மீதான அரச தரப்பின் குற்றச்சாட்டு.

பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பயங்கரவாதிகள்; பயங்கரமான குற்றச் செயல்களைப் புரிந்தவர்கள்; அரசியல் கைதிகள் அல்ல; அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் எவரும் சிறைச்சாலைகளில் இல்லை; பயங்கரவாதிகளே உள்ளனர். அரசியல் கைதிகள் விவகாரத்தில் இதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு.

இதனை அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்கள் அரசியல் நோக்கங்களுக்காகவே அரசியல் கைதிகள் என பெயர் சூட்டப்பட்டுள்ளனர் என்றும், அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக இந்தக் கருத்தை அவர் வெளியிடவில்லை. அமைச்சரவைப் பேச்சாளர் என்ற பதவிநிலை பொறுப்பில் இருந்து உறுதியாகத் தெரிவிப்பதாக அவர் செய்தியாளர்களுடனான இணையவழிச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை பயங்கரவாதிகள் என்றே கூற வேண்டும். அவர்களை அரசியல் கைதிகள் என கூற முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என்பதைப் பலமுறை குறிப்பிட்டுள்ளோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளே உள்ளனர். அவர்கள் ஆண் பெண் என்று பால் நிலை ரீதியாகவும் குற்றச் செயற்பாடுகளின் அடிப்படையிலும் கைதிகள் வேறுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானம் எடுக்கும். அரசியல் காரணிகள் செயற்படுத்தப்படமாட்டாது” என்பதும் அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பிலவின் வாய்வழியிலான அரசாங்கத்தின் கூற்று.

நாட்டில் குற்றவியல் சட்டங்கள் இருக்கின்றன. குற்றவியல் நடவடிக்கைக் கோவை என்ற பெயரில் பல்வேறு குற்றச் செயல்களுக்கான சட்ட நடவடிக்கைகள், தண்டனை முறைகள் என்பவற்றை இந்தச் சட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன. குற்றச்செயல்களுக்கு ஏற்ற வகையில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதையும் இந்தச் சட்டவிதிகள் வரையறுத்திருக்கின்றன.

தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவே ஆயுதமேந்திப் போராடினார்கள். அந்த ஆயுதப் போராட்டம் தனிநாட்டை இறுதி இலக்காகக் கொண்டிருந்தது. இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வது இயலாத காரியமாகி உள்ளது. அதற்கு அவர்களுடைய பெருந்தேசியவாதப் போக்கு தடையாக உள்ளது என்ற காரணத்தினால்தான் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அந்த அரசியல் இலக்கை அடைவதற்காகவே தமிழ் இளைஞர்கள் தமது போராட்டத்தை ஆயுதவழியில் தீவிரப்படுத்தி இருந்தார்கள். இதுவே நாட்டில் யுத்தம் மூண்டதற்கான அடிப்படை காரணம்.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை ஆயுத வழியில் மாத்திரம் முறியடிக்க முடியாது என்று உணர்ந்த அரசு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உருவாக்கியது. கொடூரமான சட்டவிதிகளைக் கொண்ட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கண்ணில் கண்டவர்களையும் எதிரில் அகப்பட்டவர்களையும் கேட்டுக் கேள்வியின்றி கைது செய்யும் அதிகாரங்கள் பொலிசாருக்கு மட்டுமல்லாமல் முப்படையினருக்கும் வழங்கப்பட்டிருந்தது.

இந்தச் சட்ட வலிமையோடு துப்பாக்கிகள், கைக்குண்டுகள் சகிதம் வீதிகளில் இறங்கி, ஊர்களில் பிரவேசித்து வீடுகளில் புகுந்த படையினர் வகைதொகையின்றி கண்ணில் அகப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்தனர். குறிப்பாக அவர்கள் தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதாகக் கூறினார்கள்.

பயங்கரவாதம் என்ற குற்றச் செயலைக் கட்டுப்படுத்துவதற்காகவோ அல்லது பயங்கரவாதிகள் என கருதப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகவோ குற்றவியல் ரீதியாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில் அது இனவாத ரீதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. கொண்டிருக்கின்றது.

அடக்குமுறையையும், ஆக்கிரமிப்பையும், ஒடுக்குமுறையையும் கருவிகளாகக் கொண்டு அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பயங்கரவாதம் என்ற குற்றச் செயலைக் கட்டுப்படுத்துவதற்கான குற்றவியல் சட்டமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அப்பட்டமாக அநீதியான முறையில் முழுக்க முழுக்க தமிழினத்திற்கு எதிரான அரசியல் காரணங்களுக்காகவே அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நாட்டின் குற்றவியல் சட்டங்கள் வரையறைகளைக் கொண்டிருக்கின்றன. விதிமுறைகளுக்கமைய அவைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குற்றங்களுக்கு ஏற்ற வகையில் அந்தச் சட்டங்களில் தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தண்டம் (தண்டப் பணம் செலுத்துதல்) சிறைவாசம், மற்றும் மரண தண்டனை என அந்தச் சட்டங்களின் தன்மைகள் குற்றச் செயல்களுக்கு ஏற்ற வகையில் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன, பயங்கரவாதச் செயல் என்றால் என்ன என்பதற்கான வரையறை உள்ளடக்கப்படவில்லை. ஆனால் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கான தண்டனை என்ன என்பது அதில் விபரிக்கப்பட்டிருக்கின்றது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 24 அரசியல் கைதிகள் விவகாரம்: சட்ட நடவடிக்கை என்பது காலம் கடத்துவதோ? நீதிமன்றச் செயற்பாடும் அதுதானோ? - பி.மாணிக்கவாசகம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரை பதினெட்டு மாதங்களுக்குத் தடுத்து வைத்திருக்க முடியும். ஆனால் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை அந்த உத்தரவு புதுப்பிக்கப்பட வேண்டும். அந்த சந்தேகநபர் சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடையவர் என்று நியாயமான சந்தேகம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் (அமைச்சருக்குப் பதிலாக அதிகாரமளிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்) உணர்ந்தால், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அவருக்கான இந்தத் தடுப்புக்காவல் உத்தரவைப் புதுப்பிக்க சட்டத்தில் வழி செய்யப்பட்டிருக்கின்றது.

சுவரொட்டிகளை ஒட்டுவது உள்ளிட்ட பல விடயங்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான குற்றச் செயல்கள் அல்லது சட்டத்திற்கு விரோதமான செயல் என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் குற்றச்செயல்களுக்குச் சிறைத் தண்டனை மற்றும் மரண தண்டனையும் தண்டனைகளாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது தனித்துவமான சட்டமாக அல்லாமல், நாட்டின் குற்றவியல் நடவடிக்கைக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கான தண்டனைகளையும் உள்ளடக்கியதாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே இந்தச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை என்பன வழங்கப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபட்டு தடுப்புக்காவலில் இருப்பவர்கள் சித்திரவதை விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அவர்கள் சொல்லொணாத துன்பங்களையும் கஸ்டங்களையும் அதன்போது அனுபவிக்க நேரிடுவதாக, அதிஸ்டவசமாக விடுதலையாகி வந்துள்ளவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சட்டவிரோத நடவடிக்கைகள் என பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள செயல்கள் (சுவரொட்டிகளை ஒட்டுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோருதல், அவர்களுக்கு நேர்ந்த அநியாயங்களுக்காகக் குரல் கொடுத்தல் போன்றவை) அரசியல் காரணங்களுக்காகவே முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்படுபவர்கள் அரசியல் கைதிகளேயன்றி, சாதாரண குற்றச் செயல்களைப் புரிந்த குற்றவாளிகள் அல்ல; பயங்கரவாதிகளுமல்ல.

நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விசாரணைக்காக வெளியில் கொண்டு செல்வதென்றால், உரிய நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களை எந்தவித அனுமதியுமின்றி இராணுவ புலனாய்வாளர்களும், பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரும் தமது முகாம்களுக்கு கொண்டு சென்ற விசாரணை செய்கின்ற நடைமுறைகள் இடம்பெற்று வருகின்றன.

unnamed 2 அரசியல் கைதிகள் விவகாரம்: சட்ட நடவடிக்கை என்பது காலம் கடத்துவதோ? நீதிமன்றச் செயற்பாடும் அதுதானோ? - பி.மாணிக்கவாசகம்
அதனையும்விட சித்திரவதை முறையிலான விசாரணைகளின்போது சந்தேக நபர்களினால் தெரிவிக்கப்படுகின்ற வாக்குமூலங்கள், ஒப்புதல் வாக்குமூலமாக, நீதிமன்ற விசாரணைகளின் போது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்ற மோசமான மனிதாபிமானமற்ற செயற்பாடும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சட்டரீதியாக கைக்கொள்ளப்படுகின்றது.

இதுபோன்ற மனிதாபிமானமே இல்லாத கொடுமையான சட்டவிதிகளையும், சட்டரீதியான நடைமுறைகளையும் கொண்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் யுத்தம் முடிவடைந்து பதினொரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளைத் துரிதப்படுத்தி வழக்குகளை முடிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகி இருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தில் நேரடியாகப் பங்கேற்றிருந்தவர்கள் புனர்வாழ்வுப் பயற்சி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பினருக்கு உதவினார்கள் என்ற காரணத்திற்காக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்புமில்லை; சாதாரண நிலையிலான பிணை அனுமதியுமில்லை; அல்லது விடுதலையும் இல்லை.

அதையும்விட மோசமான நிலைமை என்னவென்றால், போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றிருந்தவர்களைவிட சந்தேகத்திற்குரிய இவர்களையே அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் பயங்கரவாதிகள், பயங்கரமானவர்கள் எனக் கூறி பல வருடங்களாக அவர்களை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்.

பயங்கரவாத அமைப்பு என்று பிரகடனப்படுத்தி, தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பும் இல்லை. அதன் உறுப்பினர்களான ஆயுதமேந்திப் போராடுகின்ற விடுதலைப்புலிகளும் இல்லை. இந்த நிலைமையில் அவர்களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சூழ்நிலைக் கைதிகளை பயங்கரவாதிகள் என எப்படி கூற முடியும்? பயங்கரவாதிகள் எனக் கூறி அவர்களை எத்தனை காலத்துக்குத் தடுத்து வைத்திருக்க முடியும்?

அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுத்து வருகின்ற அரசாங்கம், அவர்கள் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானம் எடுக்கும். அரசியல் காரணிகள் செயற்படுத்தப்பட மாட்டாது என்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது காலம் கடத்தாமல் முன்னெடுக்கப்பட வேண்டியது. அதுவே நீதித்துறையின் இலட்சணம். பொலிஸ் விசாரணைகளையும் நீதிமன்ற விசாரணைகளையும் சாம்பாராகக் கலந்து காலம் கடத்துவது ஒருபோதும் சட்ட நடவடிக்கையாகாது. நீதிமன்ற நடைமுறையுமாகாது. இது அப்பட்டமான இனவாதப் போக்கிலான அரசியல் பழிவாங்கல். கொடுங்கோலாட்சியின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.