அரசாங்கத்துக்கு, வெள்ளை அடிக்காமல் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் – மனோ

அரசாங்கம் அறிவித்த முதற்கட்ட வாழ்வாதார நிவாரண கொடுப்பனவு ரூ. 5,000 வழங்கப்படுவதில் கொழும்பு, கம்பஹா மாவட்ட மாநகர பிரதேசங்களில் வாழும் ஏழைகளும், வருமானம் இழந்த நடுத்தர வர்க்க மக்களும், அதேபோல் மலையக தோட்டப்புறங்களில் வாழும் மக்களும், கணிசமாக புறக்கணிக்கப்படுவதாக தகவல்கள், முறைபாடுகள், கண்டணங்கள் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த வண்ணம் உள்ளன என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சமுர்தி பெறுவோர் மற்றும் சமுர்தி காத்திருப்போர் பட்டியல்களில் இருப்போர்-இல்லாதோர், வாடகை வீடுகளில், சொந்த வீடுகளில் இருப்போர்-இல்லாதோர் என்ற வேறுபாடுகளின்றி அனைவருக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் கூற்று இன்று பொய்யாகி போயிருக்கிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் ஊடகங்களில் பேசுபவை நடைமுறையில் இல்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி என்ற முறையில் எமது கண்டனத்தை தெரிவித்து, இதை நிவர்த்திக்க எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.

அதேவேளை, “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது” என அரசாங்கத்துக்கு, வெள்ளை அடிக்காமல், வாழ்வாதார நிவாரண கொடுப்பனவு வழங்குவதில் இடம்பெறும் பாரபட்ச உண்மையை ஒப்புக்கொண்டு, அரசாங்கத்துடன் பேசி நமது மக்களுக்கு நியாயமான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறு, அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் அமைச்சர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறோம். இதற்கு நாமும் முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

இந்நிலையில், இன்று எம்முன் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் மூன்று என அடையாளம் கண்டுள்ளோம்.

முதலாவது;
கொரோனாவினால் அமுல்படுத்தப்படும், தொடர் ஊரடங்கினால், பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதார நிவாரணம் வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாழும், நகர ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தொடர்பில் குரல் எழுப்பி அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது,

அடுத்தது;
தொழில் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு வந்து, இப்போது தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முடியாமல் சிக்கி நிற்கும் மக்களுக்கு உதவுவது, இப்போது 20ம் திகதிக்கு பின் அவர்கள் சொந்த ஊர் செல்ல மருத்துவ, போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது,

மூன்றாவது;
அரசாங்க வாழ்வாதார நிவாரணம் கொடுப்பனவில் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ள, மலையக தோட்டப்புற மக்கள் தொடர்பாக குரல் எழுப்பி அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது,