எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (19) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யத் தவறியதன் மூலம் அமைச்சர் தனது கடமையைப் புறக்கணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஒரு முக்கியமான தேசிய எரிசக்தி சொத்தை மேற்பார்வையிடுவதில் இத்தகைய பாரதூரமான கவனக்குறைவு அமைச்சரின் அடிப்படைப் பொறுப்பை மீறுவதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் ஊழல் புரிந்தமை தொடர்பில், கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்தும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.



