அமெரிக்க துாதுவா் கேட்ட கேள்வியும் கஜேந்திரகுமாா் “சொல்லாத” பதிலும் – அகிலன்

யாழ்ப்பாணத்தில் 22 சுயேச்சை குழுக்கள் பொது தேர்தலுக்கு போட்டியிடுகிறன.  யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கு – கிழக் கின் ஏனைய பகுதிகளிலும் அதிகளவுக்கு சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியிருக்கின்றன. அதனைவிட, அரசியல் கட்சிகளும் ஒன்றிலிருந்து பிரிந்து இன்னொன்று – பின்னா் அதிலிருந்து பிரிந்து இன்னொ ன்று என பல துருவங்களாக களமிறங்கி யுள்ளன.

யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் முன்னணிக் கட்சி ஒன்றில் தலைவருடன் இந்த சுயேட்சை குழுக்கள் மற்றும் அதிக அணிகள் களமிறங்கி யிருப்பது தொடா்பாக பேசிய போது அவர் சுவாரசியமான சம்பவம் ஒன்றைச் சொன்னார். அவரது முன்னணி வேறு சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துத்தான் தேர்தலைச் சந்திக்கின்றது. கூட்டணி அமைக்கப்பட்டதால் அவரது முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அதில் அவரும் அவரது கட்சியைச் சார்ந்த மற்றொருவரும் களமிறங்குகிறார்கள்.

இந்த நிலைமையில் அவரை சந்தித்த வீட்டுக் கட்சி அரசியல்வாதி ஒருவர் தனக்கும் ஒரு ஆசனம் தருமாறு கேட்டிருக்கின்றாா். வீட்டில் தனக்கு இடமிருக்கும் என்று கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவா் வேலை செய்தவா். இங்கு இடமில்லையென்பதால் வேறு எங்காவது இடம்பிடிக்க அவசரப்பட்டாா்.

தமக்கு கிடைத்த இரண்டு ஆசனங்களுக்கும் யாரை போடுவது என்பதை முன்னரே தீர்மானித்து விட்டதால் ஆசனம் கேட்டு வந்தவருக்கு கொடுக்க முடியவில்லை. இதே போல மற்றொரு அரசியல் பிரபலமும் அவரிடம் ஆசனம் கேட்டு வந்திருக்கின்றார். அவரது நிலைமையும் அவ் வாறானதாகவே இருந்தது. அதாவது, தாம் நீண்ட காலமாக பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் இடம்கிடைக்காதததுதான் இவா்களு டைய பிரச்சினை! கொள்கைப் பிரச்சினை ஒன்றும் இல்லை!

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இப்போது மொத்தமாக இருப்பது  6 ஆசனங்கள் மட்டும்தான். அதனால், கட்சிகள் ஒவ்வொன்றும் ஒன்பது பேரைத்தான் பட்டியலில் போடலாம். கேட்கும் அனைவருக்கும் கொடுத்து விட முடியாது என்பதுதான் நிலைமை.

இந்த நிலைமையில் முன்னணியின் தலைவரிடம் ஆசனம் கேட்டு வந்து – ஏமாற்றத்து டன் திரும்பிய இருவருமே அடுத்த வாரம் சுயேச்சை குழுக்களை உருவாக்கி அவற்றின் தலைமை வேட்பாளராக களம் இறங்கி இருக்கின்றார்கள்.

இது ஒரு உதாரணம் மட்டும்தான். பிரதான கட்சிகளில் அல்லது தமிழ் தேசிய கட்சிகளில் இடம் கிடைக்க முடியாமல் போன பலா் இவ்வாறு சுயேச்சைக் குழுக்களை உருவாக்கி இருக்கின்றார்கள். அவற்றின் தலைமை வேட் பாளராகவும் இறங்கி இருக்கிறார்கள்.

இதனை விட மற்றொரு ட்ரெண்டும் வடக்கு கிழக்கில் இருக்கின்றது. புலம்பெயர் ந்த சிலர் இரட்டை பிரஜா உரிமை பெற்றிருக்கி ன்றார்கள். நாட்டில் ஏதாவது பொருளாதார முயற்சிகளில் அல்லது சமூக நலத் திட்டங்களில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள். அவர்களை உசுப் பேத்துவர்களை நம்பி அவர்களும் சுயேச்சைக் குழுக்கள் சிலவற்றை உருவாக்கி களமிறங்கி இருக்கின்றார்கள்.

தங்களுடைய தொழில் முயற்சிகள் அல்லது சமூக நலத்திட்டங்கள் பாராளுமன்றம் செல்வதற்கு உதவும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அதாவது பத்துப்பேருக்கு வேலை கொடுத்திருப்பதும், ஐம்பது பேருக்கு உலருணவு நிவாரணம் கொடுத் திருப்பதால் மக்கள் தம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவிடுவாா்கள் என்று அவா்கள் நம்பு கின்றாா்கள்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி வடக்கில் கிழக்கில் அதிக அளவு சுயேச்சை குழுக்கள் இப்போது களம் இறங்கி இருப்பதற்கு இவை காரணமாக இருக்கின்றது.

இதனைவிட இன்னொரு காரணமும் இருக்கின்றது. பொதுத் தோ்தல் முடிவடைந்த பின்னா் அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல் நடைபெற விருக்கின்றது. அதன்பின்னா் மாகாண சபைத் தோ்தல்களும் நடைபெறும் என்று அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது. அதனால், இப்போது பாராளுமன்றத் தோ்தலில் களமிறங்குவது தமக்கு ஒரு பயிற்சியாகவும், மக்கள் மத்தியில் அறிமுக மாவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்று அவா்கள் நம்புகின்றாா்கள்.

இப்போது வருகின்ற பிரதான கேள்வி என்னவென்றால் இந்த சுயேச்சை குழுக்களால் எத்தனை ஆசனங்களை பெறக்கூடியதாக இருக்கும் என்பது தான்.

பிரதான கட்சிகளைப் பொறுத்தவரையில் அவற்றிற்கு ஏதோ ஒரு வகையில் மாவட்ட ரீதியாக மட்டுமின்றி கிராம மட்டத்திலும் கிளைகள் மற்றும் கட்டமைப்புகள் இருக்கின்றது. அதன் மூலமாக தங்களுடைய பரப்புரைகளை அவர்களால் முன்னெடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வாக்குச் சேகரிக்கவும் முடியும். அதனை அவர்கள் செய்கின்றார்கள்.

சுயேச்சை குழுக்களாக களம் இறங்கும் நபர்களை பொருத்தவரையில் இவ்வாறான வசதிகள் அவர்களுக்கு இல்லை. அவர்கள் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தேர்தலில் தனியாக களம் இறங்க முடியாது என்பதால் ஏதோ ஒரு வகையில் இன்னும் ஒரு எட்டு பேரை வைத்துக் கொண்டால் களத்தில் குதிக்கலாம் என்பதன் அவரது நிலைமை.

தோ்தலில் களமிறங்குவதன் மூலம் சமூகத்தில் தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்ள லாம், தமது சமூக அந்தஸ்த்தை உயா்த்திக் கொள்ளலாம் என்ற அவா்களுடைய எண் ணங்களும் மற்றொரு காரணம். அடிக்கடி ஊடக வியலாளா் சந்திப்பு. அதன்மூலமான அங்கீகாரம். சமூக வலைத்தளங்களில் படங்கள் என சுயேச்சை வேட்பாளா்களின் பரப்புரைகள் தொடா்கின்றது.

யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு பரந்த பிரதேசம். கிளிநொச்சியிலிருந்து – நெடுந்தீவு வரை இது பரந்து விரிந்துள்ளது. சுயேச்சை வேட்பாளா்கள் பலா் இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் தமது வாழ்நாளில் சென்றும் இருக்கமாட்டாா்கள். பல இடங்கள் அவா்களுக்குத் தெரிந்தும் இருக்காது. அடுத்த வீடுகளில் இருப்பவா்களுடன் பழகாதவா்கள் கூட தோ்தலில் களமிறங்கியுள்ளனா்.

தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி யாழ்ப்பாணத்தில் சுயேச்சை குழு ஒன்று தமது தேர்தல் நியமனத்தை தாக்கல் செய்வதற்கு 18 ஆயிரம் ரூபாய் மட்டும் இருந்தால் போதும். வேட்பாளர் ஒருவருக்கு 2000 ரூபாய் படி கட்ட வேண்டும். அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு பெரிய பணம் அல்ல.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கட்டுப் பணம் இல்லை. வழமையாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பல இருந்தாலும், அவை அனைத்தும் தோ்தலில் போட்டியிடுவதில்லை. இம்முறை அனேகமாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அனைத்துமே தோ்தலில் களமிறங்கியுள்ளன. தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கான களமாகத்தான் இதனை அவா்கள் பயன்படுத்துகின்றாா்களே தவிர, தம்மாலும், வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற நம்பிக்கையினால் அல்ல.

இரண்டு தினங்களுக்கு முன்னா் யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க துாதுவா் ஜூலி சங், கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்துடன் நடத்திய பேச்சுக்களின் போதும் இதனைத்தான் கேள்வியாக எழுப்பியிருந்தாா். “தமிழ்க் கட்சிகள் அனைத்துமே ஒரே கொள்கையுடன்தான் உள்ளன. பின்னா் எதற்காக இந்தனை கட்சிகளாக பிரிந்து தோ்தலை சந்திக்கின்றீா்கள்?” என்பதுதான் அவா் எழுப்பிய கேள்வி!

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி மற்றும் 13 ஆவது திருத்தம் போன்ற விடயங் களால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிய வேண்டி வந்தது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமாக இருந்து வருகின்றோம். ஆனால், மற்றக் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன என்பது எங்களுக்கும் விளங்கவில்லை. கொள்கையளவில் இவர்களுக்கிடையில் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு இருக்கக்கூடியபிரச்சினைகளை அவர்களிடத்தேதான் நேரடியாகக் கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கின்றாா்.

தமிழ்க் கட்சிகள் இவ்வாறு பிரிந்து நிற்பதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளன. ஒன்று – ஈகோ. இரண்டாவது – தோ்தல் நியமனப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது. 1977 இலும் இதனைப் பாா்க்க முடிந்தது. 2010 இலிலும் இதனைப் பாா்க்க முடிந்தது. ஆனால், கஜேந்திரகுமாருக்கும் இது தெரியும. அதனை அவா் சொல்லவில்லை!