அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு ஜனாதிபதி புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
மேலும், உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியா வின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். ரஷியாவின் இந்த 2 எண்ணெய் நிறுவனங்களும் உலக கச்சா எண்ணை வினியோகத்தில் 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன.
ரஷிய அரசுக்கான மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன.அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:-
ரஷியா மீதான தடைகள் நட்பற்ற செயல். இது நிச்சயமாக ரஷியா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிதான். இவை சில விளைவுகளை ஏற்படுத்தினாலும் எங்களது பொருளாதாரம் பாதிக்கும் வகையில் இருக்காது. இவை நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறோம்.
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷியா ஒரு போதும் அடிபணியாது. சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அப்படி செய்யாது. ரஷியா வின் எரிசக்தி துறை நம்பிக்கையுடன் உள்ளது.
போரை விட பேச்சுவார்த்தை எப்போதும் சிறந்தது. போர் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய டோமோ ஹாக் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.



