அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பின் உறுப்பினராக இந்தியத் தமிழர்

அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பு அந்நாட்டிலுள்ள தேசிய அறிவியல் வாரியம். அதன் உறுப்பினராக இந்தியத் தமிழரான சுதர்சன் பாபுவை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் 1986ஆம் ஆண்டு பொறியியல் படிப்பும், 1988ஆம் ஆண்டு சென்னை ஐ.ரியில் தொழில்துறை உலோகவியல் முதுநிலை பட்டப்படிப்பும் முடித்தவர். அதன் பின்னர் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் மேம்பட்ட உற்பத்தி, சேர்க்கை உற்பத்தி, உலோகவியல் போன்ற பொறியியல் பிரிவுகளில் 21 வருட அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர் ஏற்கனவே ப்ரெடிசென் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும், ஒக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். மேலும் இவரை 6 ஆண்டுகளுக்கு தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினர்களாக சேதுராமன் பஞ்சநாதன், சுரேஷ் வி.கரிமெல்லா ஆகிய இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.