அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசுடனான உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா அதிக அக்கறை கொண்டுள்ளது. அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் சம்பவங்களை அவதானித்தால் இது நன்கு புலப்படும்.

சிறீலங்காவில் புதிய அரசு அமைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதாவது கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரையிலுமான ஏறத்தாழ 4 மாத காலத்தில் பல படைத்துறை அதிகாரிகள் சிறீலங்காவுக்கு உயர் மட்ட பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், சிறீலங்காவின் 72 ஆவது சுதந்திர தினத்திற்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சிறப்பு செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரபு உலகத்தின் வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகள் மீது மேற்குலகம் மேற்கொண்ட, தமக்கு ஆதரவான அரசுகளை உருவாக்கும் முயற்சி, சிரியாவில் இடம் பெற்று வரும் போரில் தடம் புரண்டுள்ளது. ஈரான் விவகாரத்திலும் அவர்களால் அதிகம் முன்நகர முடியவில்லை.

இவை இரண்டுக்கும் காரணம் ரஷ்யாவின் உள்நுழைவாகும். அதாவது ஈராக், லிபியா என மேற்குலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, பார்வையாளராக இருந்த ரஷ்யா சிரியா விவகாரத்தில் நேரிடையாக களமிறங்கியதுடன், ஈரான் விவகாரத்தில் ஈரானுக்கு தனது ஆயுத தொழில் நுட்பங்களை வழங்கி பலப்படுத்தியுள்ளது.

சிரியாவின் விவகாரத்தை பொறுத்த வரையில் ஏறத்தாழ 12 நாடுகள் இந்த போரில் பங்கெடுத்து வருகின்ற போதும், அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, கட்டார், ஈரான் ஆகிய நாடுகள் நேரிடையாக பங்கெடுத்து வருகின்றன.

இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என அமெரிக்கா களமிறங்கிய போதும், அவர்களின் உண்மையான நோக்கம் சிரியாவில் தமக்கு சார்பான ஆட்சியை கொண்டு வருவதே.91c53ac51187464fbee89142e2785199 18 அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஆனால் ரஷ்யா சிரியாவுக்கு ஆதரவாக களமிறங்கியதால் கள நிலமை மாறிவிட்டது. அதே சமயம், ஆட்சி மாற்றம் என்ற அமெரிக்காவின் உள்நோக்கம் அறிந்த துருக்கியும் ரஷ்யாவின் பக்கம் நிலையெடுக்க தலைப்பட்டது. அதனை தடுப்பதற்கு அமெரிக்கா முயன்ற போதும், அமெரிக்காவின் எதிர்ப்புகளையும் மீறி ரஷ்யாவின் எஸ் 400 என்ற அதி நவீன ஏவுகணைகளை துருக்கி பெற்றுக் கொண்டது.

அதாவது தமக்கு ஆதரவான பூகோள சக்திகளை இணைப்பதன் மூலம் தமது வர்த்தக மற்றும் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்துவதே இந்த போரின் பின்னுள்ள நோக்கம்.

எனவே தான் தற்போது சிரியா விவகாரம் தொடர்பில் ரஷ்யாவும் துருக்கியும் முரண்பட்டுள்ள நிலையில், அதனை தனக்கு சதகமாக்க முயன்று வருகின்றது அமெரிக்கா. அதற்காக அமெரிக்கா தனது சிறப்புத் தூதுவரை துருக்கிக்கு அனுப்பியிருந்தது. அதாவது துருக்கியை ரஷ்யாவின் பக்கமிருந்து நகர்த்தும் திட்டம் இது. இந்த நிலையில் தான் தற்போது ரஷ்யாவின் பார்வை சிறீலங்கா மீது பதிந்துள்ளது.

ஒக்டோபர் மாதம் ரஷ்யாவின் அனைத்துலக படைத்துறை ஒத்துழைப்பு பிரிவு அதிகாரிகள் கேணல் மக்சீம் பென்கின் தலைமையில் சிறீலங்கா வந்திருந்ததுடன், இரு தரப்பு படைத்துறை ஒத்துழைப்புகள் குறித்த கரந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் இடம் பெறும் இந்த கலந்துரையாடல்களில் இரு தரப்பு பயிற்சிகள், படைத்துறை உதவிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால் போர்க் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட மற்றுமொரு சிறீலங்கா இராணுவ அதிகாரியான கமால் குணரட்ணவை

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் பாதுகாப்புச் செயலாளராக நியமித்தவுடன், சிறீலங்காவுக்கான ரஷ்யாவின் தூதுவர் யூரி மெற்றெரி அவரை சந்தித்திருந்தார். கடந்த நவம்பர் மாத இறுதிப் பகுதியில் இடம் பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராயப்பட்டது.

அதன் பின்னர் ரஷ்ய இராணுவத்தின் தளபதியான ஜெனரல் ஒலெக் சலுகோவ் சிறீலங்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொண்டது மிகவும் முக்கியமானது. சிறீலங்காவின் 72 ஆவது சுதந்திர தினத்தில் பயணம் மேற்கொண்ட குழுவில் தரைப்படையின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் விளமிடீர் சிறிடோவ், கேணல் இகொர் ஸ்ரின் ஆகியோர் அடங்கியிருந்ததுடன், சிறீலங்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவின் 62 ஆவது ஆண்டு நிகழ்வையும் அவர்கள் கொண்டாடியதுடன், சிறீலங்கா அரச தலைவரையும் சந்தித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ரஷ்ய படையினரின் பொறியியல் பிரிவினர் சிறீலங்காவுக்கு வருகை தந்ததுடன், வன்னிக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். லெப். ஜெனரல் லூறி ஸ்ரவிற்ஸ்கி தலைமையிலான இந்த குழுவினர் கண்ணி வெடிகளை அகற்றும் பயிற்சி என்ற போர்வையில் சிறீலங்காவுக்கு வருகை தந்திருந்தனர்.russia 2020 1 அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இதனிடையே, சிறீலங்காவில் அணுசக்தி மின்னிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தாம் ஆய்வு செய்து வருவதாக சிறீலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெற்றெரி தெரிவித்துள்ளார்.

அதாவது ரஷ்யாவின் இந்த நகர்வுகள் என்பது அண்மையில் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அமைத்துக் கொண்ட புதிய வர்த்தக கூட்டணியின் திட்டமாகும் என்பதை அறிந்து கொள்ள அமெரிக்காவுக்கு அதிக நேரம் எடுக்காது.

எனவே தான் கடந்த வாரம் ஊகவியலாளர்களிடம், பேசிய அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ அவர்கள், மிலேனியம் சலஞ்ச் உடன்படிக்கை தொடர்பில் அவசரம் காண்பித்திருந்தார். ஆனால் அமெரிக்காவின் பிரசன்னத்தை தென்னாசியாவில் தடுப்பதில் மேற்கூறப்பட்ட மூன்று நாடுகளுக்கும் தொடர்புகள்  உண்டு.

அமெரிக்காவின் உன்படிக்கைக்கு எதிராக பௌத்த துறவிகள் போராட்டம் மேற்கொள்ள ஆரம்பித்தது அமெரிக்காவுக்கு அதிக சினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதவாது சிறீலங்காவின் அரசியலில் பௌத்த துறவிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும்.

இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை (14) சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்லா மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் அவருக்கு  பயணத்தடை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சில்வா அதிகளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவின் பூகோள அரசியல் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதற்கான அடையாளம் தான் இந்த அறிவிப்பு. ஆனால் இதனை தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றனர் என்பது தற்போது முக்கியமானது.

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரில் அமெரிக்கா தனது ஆதாரங்களை முன்வைத்து சிறீலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் அமெரிக்காவிடம் முன்வைக்க வேண்டும்.