அமெரிக்காவிடம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் முன்னாள் போராளிகள்

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க வெளிவிவகார செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய போதே இக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலை மாற்றங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் தொடர்பாகவும் அமெரிக்க செனட் சபையினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியாவின் தலையீடட்டினால் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள், மற்றும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகியன குறித்தும் பேசப்பட்டன.

அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்பட்டதில்லை என சுட்டிக்காட்டிய விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்ககள், இந்த விடயத்தை கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு செனட் சபையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.