அமெரிக்கர்கள் கொண்டு வந்த பைகளில் என்ன இருந்தது – விமல் வீரவன்ச

கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் பைகளை சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், சிறிது நேரத்துக்குப் பின்னர், அமெரிக்க தூதரகத்துக்குச் சொந்தமான KL 6586 என்ற இலக்கமுடைய ஜீப் ஒன்று விடுதிக்கு வந்து அந்த பைகளை எடுத்துச் சென்றது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார் .

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் கொண்டு சென்ற ஆறு பைகளையும், விடுதியின் பாதுகாவலர்கள் சோதனையிட முனைந்தனர். அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த பைகள் ஆய்வு செய்யப்படவில்லையா? அவற்றில் சந்தேகத்துக்கிடமான அல்லது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களால், ஸ்கானர்களின் மூலம் பைகளைச் சோதனையிட அவர்கள் அனுமதிக்கவில்லையா? என்பதே எமது கேள்வி.

அமெரிக்கர்கள் வழக்கமாக நாட்டிற்கு வருவதால் பைகளில் என்ன கொண்டு வருகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு விளக்கம் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.