அனோஜன் விடுவிக்கப்பட்டமைக்கு வெளிவகார அமைச்சு சர்வதேசத்துக்கு நன்றி தெரிவிப்பு

மரண தண்டனையிலிருந்து இலங்கையரான அனோஜன் சிவராசாவைப் பாதுகாத்தமை, அரசாங்கத்தின் வெளிவிவகார உறவுகளின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசாவின் விடுதலைக்காகத் தலையீடு செய்த ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இன்று (23) திங்கட்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிளவுபடாத வெளிவிவகாரக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, உலக நாடுகளுடன் இணக்கமாகச் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் சவுதி அரேபிய நீதிமன்றம் முழுமையாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.