அனோஜனின் பெற்றோர்- ஜனாதிபதி சந்திப்பு : சவுதி தூதரகத்தில் மனுவொன்றையும் கையளிப்பு

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சவுதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தங்களது அமைச்சும் சிவராசா அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சவுதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் ஊடாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை, சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்கு இன்று(21) சென்று அவசர மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை – நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த அனோஜனின் குடும்பத்தினருடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தூதரக அதிகாரிகளிடம் அனோஜனின் தாயாரும் குடும்பத்தினரும் மனுவைக் கையளித்ததுடன் மனிதநேய அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கி தாய்நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.