அனைத்து அடிப்படைவாத அமைப்புக்களையும் தடை செய்ய வேண்டும் – சபா குகதாஸ் வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள அனைத்து இன, மத அடிப்படைவாத அமைப்புக்களையும் தடைசெய்யவதே உண்மையான ஐனநாயகம் ஆகும் என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவா் இவ்வாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஆட்சியாளர்கள் ஒரு தலைப் பட்சமாக சில இனங்களை குறிவைத்து தடை செய்தல் மற்றும் அவா்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏற்படுத்தல் என்பது ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்தார்கள். அத்துடன் இலங்கை ஐனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஆட்சி புரிந்து கொண்டு பல இனமக்கள் வாழும் இந்த நாட்டில் சிறுபாண்மைச் சமூகங்களை குறிவைத்து அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப் படுத்தல் நிலையான ஐனநாயகத்திற்கு ஆரோக்கியமாக அமைய சாத்தியமில்லை.

பெரும்பாண்மை இனத்தின் அடிப்படைவாத அமைப்புக்களை ஆட்சியாளர் தங்களின் தேவைக்காக மறைமுகமாக ஆதரித்தல் நாட்டின் அமைதிக்கும் சீரான ஆட்சிக்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும்.

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கை பூர்வீக தாயகமாக கொண்டு அதி உச்ச அதிகாரப் பகிர்வை வேண்டி போராடும் மக்கள் மிக அவதானம். தற்போது சில சக்திகள் அடிப்படைவாத அமைப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் தொடர்ந்து தமிழர்கள் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழர் தேசமாக ஓரணியில் ஒற்றுமையாக பிரதேச வேறுபாடுகளை களைந்து வலுப் பெறுவதே எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாகும்.