அதிகாரத்தைத் தக்க வைக்க ஐ.தே.க. முயற்சி; சாடுகின்றார் வாசுதேவ

நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதாலேயே, சபாநாயகர் பதவியிலிருந்து கரு ஜயசூரிய விலகாமல் இருக்கிறார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனவரி 3ஆம் திகதி, நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. இதனையடுத்து நாம் எமது செயற்பாடுகளை அவ்வாறே மேற்கொள்வோம். ஆனால், நாடாளுமன்றில் எல்லாம் மாறிவிட்டாலும் சபாநாயகர் பதவி மட்டும் அவ்வாறே காணப்படுகிறது.

பிரதமர், ஜனாதிபதி என அனைவரும் மாறிவிட்டார்கள். இந்த நிலையில், நாம் இந்த சபாநாயகரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஜனாதிபதித் தேர்தலில் எமக்குத்தான் மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அதாவது, புதியவர்கள் வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள்.

எனினும், சபாநாயகர் கருஜயசூரிய, தொடர்ந்தும் சபாநாயகராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுள் ஒருவராவார். தற்போது ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றில் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். இதற்கு நாம் என்றும் இடமளிக்க முடியாது. அவர் செய்வது தவறு என இந்த நாட்டின் மக்களும் உணர்வார்கள்” என்றார்.