அடித்து ஆடுவதா அல்லது ஆட்டமிழப்பதா? தீர்மானம் ரணில் வசமே – பஸில் ராஜபக்ஷ தெரிவிப்பு

basil rajapaksa அடித்து ஆடுவதா அல்லது ஆட்டமிழப்பதா? தீர்மானம் ரணில் வசமே - பஸில் ராஜபக்ஷ தெரிவிப்பு“தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாட வேண்டும் என்று ரணிலிடம் தெரிவித்து விட்டேன். அடித்தாடுவதா? தவறான முடிவெடுத்து ஆட்டமிழப்பதா? என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்” என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநரான பஸில் ராஜபக்ஷ தன்னை சந்தித்த கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 15 ஆம் திகதிக்கு பிறகு பாராளுமன்றம கலைக்கப்படும் என உதயங்க வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து பஸில் ராஜபக்ஷவை ஆளுங்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்தனர். பாராளுமன்றத் தேர்தல் முன்னரே நடக்கும் என்றால் முற்கூட்டியே கூறுங்கள். தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் பஸிலிடம் கேட்டனர்.

அதற்கு அவர், “எனக்கு அது பற்றி தெரியாது, சிலவேளை ரணிலின் தகவலை உதயங்க வெளியிட்டிருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறு ஆட வேண்டும் என்பது பற்றி ரணிலுக்கு விளக்கிவிட்டேன். இனி முடிவெடுக்கும் அதிகாரம் அவரிடம்தான் உள்ளது” என்று சொன்னார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதியை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.