ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்

8 1 ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்
Palestinian fighters from the armed wing of Hamas take part in a military parade to mark the anniversary of the 2014 war with Israel, near the border in the central Gaza Strip, July 19, 2023. REUTERS/Ibraheem Abu Mustafa

பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அறையில், கைது செய்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை நான் இப்போது சமர்ப்பிக்கிறேன். எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான, பிரெண்டா ஜே ஹோலிஸ் (Brenda J. Hollis) , கடந்த இரு வருடங்களாக உக்ரேன் நிலைமை தொடர்பாக எங்களது பணிகளை முன்னெடுத்து வருவதுடன், இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து, பாலஸ்தீன நிலைமை தொடர்பான விசாரணைகளுக்கும் தலைமை தாங்குகிறார். மேலும் அண்மையில் எங்களோடு இணைந்திருக்கும் கிங்ஸ் கவுன்சில் என்னும் தகைமையைக் கொண்டிருக்கின்ற அண்ட்ரூ ஹேலி (Andrew Haley), பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பாக இப்போதும் எதிர்காலத்திலும் எமது பணிகளை முன்னெடுததுச் செல்வார்.

எனது பணிமனையால் தொகுக்கப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு, ஆய்வுசெய்யப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், ஹமாசின் மூன்று உயர் தலைவர்களான யாயா சின்வார், மொஹமட் டயிவ், இஷ்மாயில் ஹனியா ஆகியோர் மேல், 2023ம் ஆண்டு ஒக்ரோபர் 7ம் திகதியிலிருந்து இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் இழைக்கப்பட்ட பின்வரும் பன்னாட்டுக் குற்றங்களுக்கான பொறுப்பு சுமத்தப்படுகிறது. மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தப்படும் மக்களைக் கூட்டாக அழித்தல், மனிதகுலத்துக்கு எதிரான குற்றமும் போர்க்குற்றமுமான கொலை, போர்க்குற்றமாக வகைப்படுத்தப்படும் பணயக்கைதிகளைப் பிடித்துச் செல்லும் செயற்பாடு, மனிதகுலத்துக்கு எதிரான குற்றமும் போர்க்குற்றமுமான பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் போது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்வு, வேறு பாலியல் ரீதியிலான வன்முறைகள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றமும் போர்க்குற்றமுமாக வகைப்படுத்தப்படும் சித்திரவதை, மனித குலத்துக்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தப்படும் பணயக்கைதிகள் மீது மேற்கொள்ளப்படும் மனிதாயமற்ற செயற்பாடுகள், போர்க்குற்றமாக வகைப்படுத்தப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத பணயக் கைதிகளின் மாண்புக்கு எதிரான வகையில் அவர்களைக் கொடூரமாக நடத்தும் செயற்பாடுகள், எமது விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தற்போது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆயுதப் போரின் போது, இஸ்ரேலின் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பரவலாகவும் கட்டமைக்கப்பட்ட வகையிலும் இவ்வாறான குற்றங்கள் ஹமாசாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும் இழைக்கப்பட்டன.

2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ம் திகதியன்று ஹமாசாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும், இஸ்ரேலின் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு அவர்கள் மேல் தொடுக்கப்பட்ட ஏனைய தாக்குதல்களுக்கும் பணயக் கைதிகளாக அவர்களைப் பிடித்துச் சென்றதற்குமான குற்றவியல் பொறுப்பு இந்தத் தலைவர்கள் மேல் சுமத்தப்படுகிறது.

ஆகக் குறைந்தது ஆறு முக்கிய இடங்களில் உயிர்பிழைத்தவர்களையும், கண்கண்ட சாட்சிகளையும் செவ்வி கண்டு, இவ்வாறான சான்றுகளைத் திரட்டுவதில் எனது பணிமனை அயராது பணிபுரிந்திருக்கிறது. சிசிரிவி கமராக்கள் (CCTV cameras) மூலம் திரட்ப்பட்ட தரவுகள், உறுதிப்படுத்தப்பட்ட குரல் பதிவுகள், ஒளிப்படங்கள், காணொளிகள், நிபுணர்களின் சாட்சியங்கள், மற்றும் ஹமாசையும் ஏனைய ஆயுதக் குழுக்களையும் சேர்ந்தவர்களது கூற்றுகள் ஆகியவற்றிலிருந்து எமக்குக் கிடைத்த சான்றுகளை வைத்தே, இந்த விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு ஒக்ரோhபர் 7ம் நாள், அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை சின்வார், டயிவ், ஹனியா ஆகிய மூன்று தலைவர்களும், திட்டமிட்டது, தொடக்கியது மட்டுமன்றி தமது சொந்த வார்த்தைகள் மூலமும், செயல்கள் மூலமும் இத்தாக்குதல்களுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உயர்தலைவர்கள் என்ற அடிப்படையிலும், இக்குற்றங்களை சேர்ந்து இழைத்தவர்கள் என்ற அடிப்படையிலும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இஸ்ரேலிலிருந்து, தமது இல்லங்களிலிருந்து, தமது சமூகங்களிலிருந்து பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மனிதாயமற்ற சூழ்நிலைகளில் வைக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களுள் ஒரு சிலர் பாலியல் வன்புணர்வு உட்பட மிக மோசமான பாலியல் வன்முறைகளுக்கு
உள்ளாக்கப்பட்டிருப்பதற்கும் சான்றுகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன.

மருத்துவ அறிக்கைகள், இக்காலத்தில் எமக்குக் கிடைத்திருக்கும் காணொளிகள் மற்றும் ஆவணச் சான்றுகள், தாக்குதல்களில் உயிர்பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்து, ஒக்ரோபர் 7ம் திகதி இழைக்கப்பட்ட குற்றங்களையும், பாலியல் வன்முறைகள் தொடர்பாக எமக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கின்ற அறிக்கைகளையும் நாங்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவருகிறோம்.

பணயக்கைதிகளாகப் பிடித்துச்செல்லப்பட்ட அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்துகிறேன். அவர்கள் அனைவரும் சேமமாக அவர்தம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவேண்டும். நல்ல மனச்சாட்சி மற்றும் அறநெறி என்பவற்றால் உந்தப்பட்டும், பன்னாட்டு மனிதாயச் சட்டத்தின் அடிப்படையிலும், இந்த விடுதலை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். பணயக்கைதிகள் உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும்.

இதுமட்டுமன்றி, இன்னொரு விடயத்தையும் நான் இங்கு அறிவிக்கிறேன்.

எனது பணிமனையால் திரட்ட்பட்டு, ஆய்வுசெய்யப்பட்ட சான்றுகளின் அடிப்டையில், இஸ்ரேலிய பிரதம மந்திரியான பெஞ்சமின் நெத்தன்யாகு (Benjamin Nethanyahu), பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கலண்ற் (Yoav Gallant) , ஆகிய இருவர் மீதும், 2023ம் ஆண்டு ஒக்ரோபர் 8ம் திகதியிலிருந்து, பாலஸ்தீன தேசத்துக்குட்பட்ட பிரதேசத்தில் இழைக்கப்பட்ட பன்னாட்டுக்குற்றங்களுக்கான குற்றப்பொறுப்பு சுமத்தப்படுகிறது. மக்களைப் பட்டினிக்குள்ளாக்குவதை போரில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துதல், அப்பாவிப் பொதுமக்களுக்கு வேண்டுமென்று தாங்கொணாத் துன்பத்தை ஏற்படுத்துதல், உடலில் படுகாயத்தை ஏற்படுத்துதல், உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவித்தல், அல்லது குரூரமாக நடத்துதல், ஒருவரைக் கொலைசெய்ய வேண்டும் என்று முடிவுசெய்து அக்குறிப்பிட்ட நபரைக் கொலைசெய்தல், ஓர் அப்பாவிப் பொதுமக்கள் சமூகத்துக்கு எதிராக வேண்டுமென்றே தாக்குதல்களைத் தொடுத்தல். அத்தோடு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழித்தல், பல்வேறு துன்புறுத்தல்கள், அத்துடன் மனிதாயத்துக்கு எதிரான வேறு குற்றங்களை இழைத்ததற்கான குற்றச்சாட்டுகள். காஸாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஆயுதப் போர்ப் பின்புலத்தில் அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான பரவலானதும், கட்டமைக்கப்பட்ட ரீதியிலானதுமான தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஒரு அரசின் கொள்கையாக இவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. துரதிட்டவசமாக இவ்வாறான குற்றங்கள் இன்றும் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடப்படவேண்டும்.

பொதுவாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில், இங்கு குறிப்பிடப்பட்ட தனிநபர்கள் மிகவும் ஒரு கட்டமைக்கப்பட்ட வகையில், மனிதர்கள் உயிர்பிழைப்பதற்கு அத்தியாவசியமாக இருக்கும் பொருட்கள் இந்த மக்களுக்குக் கிடைக்காமல் இவர்கள் தடுத்திருக்கிறார்கள். உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள், ஏனைய கண்கண்ட சாட்சிகள், நிபுணர்கள், செய்மதி மூலம் பெறப்பட்ட படங்கள் இந்த விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்ட இருதனிநபர்களின் கூற்றுகள் போன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறன ஒரு முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.

அதுமட்டுமன்றி உறுதிப்படுத்தப்பட்ட பல நூற்றுக்கணக்கான காணொளிகள், ஒளிப்படங்கள், குரல் பதிவுகள் போன்ற ஆதாரங்களும் அடிப்படையாக எடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பல சம்பவங்கள் அவற்றை நேரில் கண்ட சாட்சிகளால் பதிவுசெய்யப்பட்டவை. ‘காஸாவை முற்றுமுழுதான ஒரு முற்றுகைக்குள் கொண்டுவரவேண்டும்’ என்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவைத் தொடர்ந்து, மக்களின் அத்தியாவசியமான பொருட்கள் மறுக்கப்பட்டன. றாவா (Rafah) , கரம் ஷலோம், (Kerem Shalom) ஏறெஸ் (Erez) ஆகிய மூன்று எல்லைக்கடவைகளும் நீண்ட காலமாக மூடிவைக்கப்பட்டிருந்தன. இன்னும் எல்லைக் கடவைகள் திறக்கப்பட்ட பின்னரும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தைத் தடைசெய்தமை. மேலும் காஸாவில் வாழும் மக்களுக்கு குடிநீர் விநியோகத்துக்கு அத்தியாவசியமான இஸ்ரேலிலிருந்து காஸாவுக்குச் செல்கின்ற குடிநீர் குழாய்களை வெட்டியமை. 2023ம் ஆண்டு ஒக்ரோபர் 9ம் திகதியிலிருந்து தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறான குடிநீர் விநியோகம் தடைசெய்யப்பட்டிருந்தது. மேலும் ஒக்ரோபர் 8ம் திகதியிலிருந்து இன்றுவரை, காஸாவுக்கான மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைத் தாக்குதல்களுடன் சேர்த்து, உணவுக்காக வரிசையில் காத்துநின்ற மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன், இவ்வாறான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

மனிதாபிமான அமைப்புகளால் பொதுமக்களுக்கென மேற்கொள்ளப்பட்ட உதவி விநியோகம் தடுக்கப்பட்டது. உதவிப் பணியாளர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. உதவிப் பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் காரணமாக பல உதவி அமைப்புகள் தமது செயற்பாடுகளைக் குறைத்துக்கொண்டன அல்லது முற்றாக நிறுத்தின. காஸாவில் வாழும் அப்பாவிப் பொதுமக்கள் மீது பட்டினி ஓர் போராயுதமாக பயன்படுத்தப்பட்டமை மிகவும் மோசமான விளைவுகளைத் தோற்றுவித்திருக்கின்றது. இதனை மிகவும் தெளிவாகவே பார்க்கக்கூடியதாக இருப்பது மட்டுமன்றி பரவலாக அறியப்பட்டிருப்பது மட்டுமன்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் உள்ளிட்ட பல சாட்சிகளாலும் பாதிக்கப்பட்டவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது,

உணவைத் தடைசெய்ததன் காரணமாக சாவுகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழப்பு போன்ற விளைவுகள் ஏற்பட்டிருப்பதுடன், அப்பாவிப் பொதுமக்கள் மத்தியில் மிகவும் ஆழமான வேதனைகளையும் துன்பங்களையும் அவை ஏற்படுத்தியிருக்கின்றன. காஸாவின் சில பிரதேசங்களில் பட்டினிச் சாவை ஏற்கனவே பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

இவ்வாறான குற்றங்களுக்கு அதிகாரிகள் என்ற வகையிலும் சேர்ந்து குற்றம் இழைத்தவர்கள் என்ற வகையிலும் நெத்தன்யாகுவும், கலண்டும் குற்றப் பொறுப்பை ஏற்கிறார்கள். எல்லாத் தேசங்களைப் போலவே தனது மக்களைப் பாதுகாப்பதற்கு, இஸ்ரேலுக்கு அனைத்து உரிமையும் உண்டு. பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்கும் அதற்கு எல்லா உரிமையும் உண்டு. பணயக் கைதிகள் மிகவும் மோசமான முறையில் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறான உரிமைகள் பன்னாட்டு மனிதாய சட்டங்களைக் கடைப்பிடிப்பதிலிருந்து எந்த வகையிலும் இஸ்ரேலுக்கு விதிவிலக்கை அளிக்காது. ஏராளமான பெண்களையும் சிறுவர்களையும் உள்ளடக்கிய அப்பாவிப் பொதுமக்களுக்கு வேண்டுமென்றே சாவையும் பட்டினியையும் துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்காது.

தமது இராணுவ மற்றும் அரசியல் இலக்கை அடைவதற்கு இவ்வாறானவற்றைப் பயன்படுத்துதல் பன்னாட்டு மனிதாயத்துக்கு எதிரான குற்றம் என்கிற குற்றச்சாட்டையே நாங்கள் முன்வைக்கிறோம். கடந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரை எகிப்து, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இடங்களில் நான் கோடிட்டுக் காட்டியது போன்று, சட்டத்தைக் கடைப்பிடிக்கத் தவறுபவர்கள் மீது தகுந்த சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, எனது பணிமனை நடவடிக்கை எடுக்கும் போது முறையிடுவதில் எந்தப் பயனும் இல்லை. நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை இப்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். பன்னாட்டுச் சட்டங்களாக இருந்தாலும் ஆயுதப் போர் தொடர்பான சட்டங்களாக இருந்தாலும் அவை எல்லோருக்கும் பொருந்தும். எந்தவொரு சிப்பாயோ, எந்தவொரு கட்டளை அதிகாரியோ, எந்தவொரு பொதுமக்கள் தலைவரோ அவர்கள் யாராக இருந்தாலும் குற்றம் இழைத்தால் தண்டனையை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் முதியவர்கள் இளையவர்கள் உள்ளிட்ட மனித உயிர்கள், உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை வேண்டுமென்றே தடைசெய்வதை எதுவுமே நியாயப்படுத்த முடியாது. மனிதர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்துச்செல்வதை எதுவும் நியாய்படுத்த முடியாது. அல்லது அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவதை எதுவும் நியாயப்படுத்த முடியாது.

சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதில் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை இந்த பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திர நீதியாளர்கள் முடிவுசெய்வார்கள். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதியாளர்கள் இக்கடமையைச் செய்வதற்கும், நாங்கள் தொகுத்து வழங்கியிருக்கும் சான்றுகளை, எந்தவித பக்கச்சார்பும் இன்றி ஆய்வுசெய்வதற்கும் உரிய சுதந்திரம் அவர்களுக்கு இப்போது வழங்கப்படவேண்டும். மதிப்புக்குரிய நீதியாளர்கள் எனது விண்ணப்பங்களை அங்கீகரித்து, வேண்டிய கைது உத்தரவைப் பிறப்பிப்பார்களாக இருந்தால், நீதிமன்றத்தின் பதிவாளருடன் இணைந்து மிக நெருக்கமாக நான் பணியாற்றுவேன். உரோமைச் சாசனத்தில் ஒப்பமிட்ட நாடுகள் அனைத்தும் இந்த விண்ணப்பங்களுக்கும் தொடர்ந்து வரக்கூடிய கைது உத்தரவுகளுக்கும் ஆதரவைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். உலகில் ஏனைய பாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே காத்திரத் தன்மையுடன் இவ்விடயமும் கையாளப்படும். நீதியை நிலைநாட்டுவதிலும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்கும் இந்தப் பொதுவான பயணத்திலும், தேசங்கள் அல்லாத ஏனைய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறான ஒரு பின்புலத்தில், நீதிமன்றத்தின் அனைத்துப் பிரிவுகளிலும். முழுச் சுதந்திரத்துடனும் பாரபட்சம் இன்றியும் உரிய பணிகளைத் தொடர்ந்து ஆற்ற, எனது பணிமனை இடமளிக்கப்பட வேண்டும். இவ்விடயத்தை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன். இந்த நீதிமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்துவதோ, அல்லது அவர்களை அச்சுறுத்துவதோ, அல்லது பொருத்தமற்ற செல்வாக்கைச் செலுத்துவதோ, உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின், உரோமைச் சாசனத்தின் 70வது சரத்தில் உள்ள விடயங்களுக்கேற்ப நடவடிக்கை எடுக்க எனது பணிமனை எந்தவிதத்திலும் தயங்காது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால், சுதந்திரமான பாரபட்சமற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டுவதற்கான உண்மையான காரணம் இருக்குமாயின் அவ்வாறான செயற்பாடுகளை முனனெடுப்போர் மீதும் கைது உத்தரவுகளுக்கான விண்ணப்பங்களை நாங்கள் சமர்ப்பிப்போம்.

ஒக்ரோபர் 7ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பின்புலத்தில், மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடாபாக எமக்குக் கிடைத்த அறிக்கைகளைத் தொடர்ந்தும் விசாரணைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

மேலும் பல அப்பாவிப் பொதுமக்களின் சாவடைவதற்கும், படுகாயமடைவதற்கும் சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாவதற்குக் காரணமான பாரிய அளவிலான குண்டுவீச்சுதல்கள் தொடர்பாக எந்தவித தாமதமும் இன்றி பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைவாக அடிப்படை விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் குற்றங்கள் தொடர்பாகவும், குற்றங்களை இழைத்த குற்றவாளிகள் தொடர்பாகவும், வேண்டிய நடவடிக்கைகளை நாம் எடுக்கும் போது,’ Principle of Complementarity’ என்ற தத்துவத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதனை எனது பணிமனை தொடர்ந்து மதிப்பீடு செய்துகொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தேசிய அதிகாரிகள் தமது கடமையை இதயசுத்தியுடன் நிறைவேற்றும் போது மட்டும் தான் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும். எப்போது விசாரணையை அவர்கள் சுதந்திரமாகவும் எந்தவித பாரபட்சமும் இன்றி மேற்கொள்ளுகின்றார்களோ, எப்போது குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலலில் இருந்து பாதுகாக்க முயலாமல் இருக்கிறார்களளோ, அப்போது தான் இந்தக் கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்தலாம். இந்த விண்ணப்பங்களுக்குப் பின்னாலுள்ள கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கவனத்தில் எடுத்து விசாரணை எந்தவிடயத்தையும் தவறவிடாமல் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு செய்தியை இன்று மிகவும் தெளிவாக நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். சட்டத்தைச் சரிசமனாக நடைமுறைப்படுத்துகிறோம் என்பதை நாம் வெளிப்படுத்தாவிட்டால், சட்டத்தைப் பாரபட்சமான முறையில் நாம் நடைமுறைப்படுத்துவோமாக இருந்தால், சட்டத்தின் ஆட்சி முற்றுமுழுதாக நிலைகுலையும் ஒரு சூழலையே நாம் உருவாக்குவோம். அவ்வாறு செய்வதன் மூலம், எங்களை, அதாவது எல்லா சமூகங்களையும், எல்லா தனிநபர்களையும் ஒன்றாக இணைத்து, ஓர் உறுதித்தன்மையை ஏற்படுத்தும் பிணைப்புகளையும் நாம் இழந்துவிடுவோம். துன்பங்கள் நேரும் போது, இவ்வாறான ஒரு பாதுகாப்பு வலையமைப்பையே பாதிக்கப்படுபவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பெரும் ஆபத்து நிறைந்த இந்த வேளையில் இவ்வாறான ஒரு சவாலை நாம் எதிர்கொள்கிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில், போர் நிகழும் போது, பன்னாட்டு மனிதாயச் சட்டம் எல்லா மனித நடத்தைகளையும் நெறிப்படுத்தும் என்பதை நாம் கூட்டாக நிரூபித்துக்காட்ட வேண்டும். இது எல்லாத் தனிநபர்களுக்கும் பொருந்தும். அதுமட்டுமன்றி, எனது பணிமனையும் நீதிமன்றமும் கையாளும் எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தும். இவ்வாறு தான், எல்லா மனிதர்களின் உயிரும் உலகின் எந்தப் பாகத்தில் அவர்கள் இருந்தாலும் அவற்றுக்குச் சமனான பெறுமதி உண்டு என்பதை நாம் நடைமுறையில் நிரூபித்துக்காட்ட முடியும்.

நன்றி: யுரியூப் காணொளி
தமிழில்: ஜெயந்திரன்