ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்! புறம் தள்ளப்பட்டது தமிழ்

ஸ்ரீலங்காவின் 72வது தேசிய சுதந்திர தின வைபவத்தின் போது சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை இலங்கையின் 72ஆவது சுதந்திர தின வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதல் சுதந்திர தின நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் மீண்டும் 72ஆவது சுதந்திரம் தினம் அதே இடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலாவது இலங்கையின் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளால் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுவந்தன.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன ஆட்சியேற்றதன் பின்னர் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டடுவந்தது.

எனினும் இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, கோட்டாபய ஜனாதிபதியாக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் மீண்டும் தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.