ஷெரீன் அபு அக்ளேயின் (Shireen Abu Akleh) ஊடகவியல் சாதனைகள் | தமிழில்: ஜெயந்திரன்

223 Views
கடந்த மே மாதம் 11ம் திகதி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பிரதேசத்தில் இஸ்ரேல் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட அல்ஜஸீராவின் மூத்த ஊடகவியலாளரான ஷெரீன் அபு அக்ளே (Sherin Abu Akleh) ஏனைய ஊடகவியலாளருக்கு விட்டுச் செல்கின்ற விடயங்கள் (legacy) தொடர்பாக ஏற்கனவே நிறைய விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
Shireen 9. ஷெரீன் அபு அக்ளேயின் (Shireen Abu Akleh) ஊடகவியல் சாதனைகள் | தமிழில்: ஜெயந்திரன் தனது 26வது வயதில் அல்ஜஸீராவுடன் தன்னை இணைத்துக்கொண்ட அபு அக்ளே, இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருக்கின்ற மேற்குக்கரைப் பிரதேசத்தில் வாழுகின்ற பாலஸ்தீன மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளை வெளியுலகத்துக்குக் கொண்டு வருவதற்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்திருந்த ஓர் ஊடகவியலாளராகத் திகழ்ந்தார். ‘பாலஸ்தீனமகள்’ (Daughter of Palestine)  என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஷெரீன் இலட்சக்கணக்கான அரபு இல்லங்களில் பாலஸ்தீனம் தொடர்பான செய்திகளின் முகமாகத் திகழ்ந்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடபகுதியில் அமைந்துள்ள ஜெனின் அகதிமுகாமில் இஸ்ரேல் படைகள் ஒரு திடீர்ச்சோதனையை மேற்கொண்ட போது, அந்த நிகழ்வு தொடர்பான செய்திகளை அக்குறிப்பிட்ட தளத்தில் நின்று வழங்கிக்கொண்டிருந்த வேளையில், அபு அக்ளே கொல்லப்பட்டார். உலகின் பல அரசுகளும் அதே நேரம் மனித உரிமைக் குழுக்களும் அபூ அக்ளேயின் கொலையை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.

அவரது சாவு நிகழ்ந்து ஒரு சில வாரங்கள் கடந்த பின்னணியில், அவரது ஊடகவியல் சாதனைகளை அல்ஜஸீரா ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறது.

பாலஸ்தீன வானொலிக்குரலை இணைந்து தாபித்து அதற்காகப் பணிபுரிந்தவர்


பாலஸ்தீனத்தில் நடைபெற்ற முதலாவது கிளர்ச்சியின் (First Intifada) போது, அபூ அக்ளே ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்துமே மூடப்பட்டிருந்த ஒரு காலப்பகுதியில், ஜோர்தான் நாட்டில் அமைந்துள்ள யாமூக் (Yarmouk)  பல்கலைக்கழகத்தில் பத்திரிகைகள் தொடர்பாகவும் ஊடகவியல் பற்றியும் கற்கைநெறிகளை மேற்கொண்டிருந்தார். 1993ம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தங்கள் ஒப்பமிடப்பட்ட காலப்பகுதியில் மேற்குக் கரைப்பகுதிக்கு அபூ அக்ளே மீண்டும் திரும்பி வந்தார். மேலும் பன்னிரண்டு சகாக்களுடன் இணைந்து வானொலி தொடர்புபட்ட ஆறு மாதகாலப் பயிற்சியை ஷெரீன் பெற்றிருந்தார். அந்தப் பயிற்சியைப் பெற்ற சிறிது காலத்தில் ’பாலஸ்தீனக் குரல்’ என்ற பெயர் கொண்ட ஓர் வானொலிச் சேவையை (Voice of Palestine Radio) 1994ம் ஆண்டில் தாபித்து, அந்த வானொலிக்காகப் பணியாற்றி வந்தார்.

“பாலஸ்தீனத்துக்கு உள்ளேயிருந்து கொண்டே பாலஸ்தீனத்துக்கான முதலாவது வானொலியைத் தொடங்கியது தமக்கு மிகவும் பெருமையைத் தருகின்றது” என அல்ஜஸீராவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு செவ்வியில் அபூ அக்ளே தெரிவித்திருந்தார்.

அரபுலகத்தின் களம் சார்ந்த முன்னோடிப் பெண் நிருபர்களில் ஒருவர்

1996ம் ஆண்டு அஸ்ஜஸீரா ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அடுத்த வருடமான 1997ம் ஆண்டில் அல்ஜஸீராவுடன் அபூ அக்ளே தன்னை இணைத்துக்கொண்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களே அரபுலகத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் ஊடகவியலாளர்களாக வர விரும்பிய பல பெண்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அபூ அக்ளே.
Shireen 8 ஷெரீன் அபு அக்ளேயின் (Shireen Abu Akleh) ஊடகவியல் சாதனைகள் | தமிழில்: ஜெயந்திரன்
“தான் தொகுத்து வழங்கிய ஒவ்வொரு செய்தியுமே தனித்தன்மை வாய்ந்தது” என்று அவர் தெரிவித்தார்.  மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்ட ஊடுருவல்கள் போன்ற நிகழ்வுகள் தொடர்பாகப் பாராமுகமாக இருக்க முடியாது என்றும் அபூ அக்ளே குறிப்பிட்டிருந்தார்.

2006ம் ஆண்டில் காஸாத் துண்டில் (Gaza Strip) இருந்த குடியிருப்புகளில் வாழ்ந்த பாலஸ்தீன மக்களைத் திடீரென இஸ்ரேல் வெளியேற்றிய நிகழ்வு தொடர்பாக தான் மேற்கொண்டிருந்த ஊடகப் பதிவை அவர் விசேடவிதமாக நினைவுகூர்ந்தார். அவருடன் அவ்வேளையில் இணைந்து பணியாற்றிய குழுவினர் அந்தக் குடியிருப்புகளின் நடுவே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்த வீட்டின் வெளிச்சுவர்களில் அரபு மக்களுக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன. குடியிருப்பாளர்களுக்கு முன்னே அரபு மொழியைப் பேசுவதை அந்தக் குழுவினர் விவேகமாகத் தவிர்த்திருந்தார்கள்.

குடியிருப்பாளர்களின் வெளியேற்றம் தொடர்பாக மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஷெரீன் குழுவினர் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார்கள். “மிகப் பதற்றமான சூழல் அங்கே நிலவியிருந்த போதிலும் குடியிருப்பாளர்களின்  கட்டுப்பாட்டில் அந்தக் குடியேற்றம் நீண்ட நாட்களாக இருந்து, ஈற்றில் அந்தக் குடியிருப்பாளர்களுக்கே அந்த இடம் கையளிக்கப்பட்டது ஒரு சிறப்பான தருணமாக இருந்தது” என்று ஷெரீன் மேலும் தெரிவித்திருந்தார்.

போர் மற்றும் கிளர்ச்சி தொடர்பான மிக விரிவான செய்தித் தொகுப்புகள்


பாலஸ்தீனத்தில் இரண்டாவது கிளர்ச்சி (Second Intifada) ஏற்பட்ட காலப்பகுதியில் அந்த நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய பொழுது தான் ஷெரீன் அரபு உலகத்தில் அனைவருக்கும் அறிமுகமான ஓர் ஊடகவியலாளராக மாறினார். இன்னும் குறிப்பாகச் சொல்வதாயின் மேற்குக்கரைப் பிரதேசத்தின் நகரங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் ஊரடங்குகள் தொடர்பாக மிகவும் சிறப்பான விதத்தில் தகவல்களை அப்போது அவர் வழங்கினார்.
Shireen 7 ஷெரீன் அபு அக்ளேயின் (Shireen Abu Akleh) ஊடகவியல் சாதனைகள் | தமிழில்: ஜெயந்திரன்

“அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளின் பிரமாணங்களையோ அல்லது சாவு எங்களுக்கு எவ்வளவு அருகாக இருந்தது என்பதையோ நாங்கள் இலகுவில் மறந்துவிட முடியாது” என்று கடந்த ஒக்ரோபர் மாதம் அல்ஜஸீரா வெளியிட்ட ஒரு காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“மருத்துவமனைகளிலும் நாங்கள் அறிந்திருக்காக மக்களின் வீட்டுக்கூரைகளிலும் இரவுப்பொழுதுகளை அக்காலத்தில் நாங்கள் கழித்தோம். ஆபத்துகள் பல எம்மைச் சூழ்ந்திருந்த போதிலும் அவை அனைத்துக்கும் இறுங்காது செய்திகளைத் தொடர்ச்சியாக வழங்குவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

காஸாத்துண்டு 2008-2009, 2012, 2014 , 2021 போன்ற காலப்பகுதியில் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட போது அங்கு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பான செய்திகளையும் அபூ அக்ளே வழங்கினார்.

2006ம் ஆண்டில் லெபனானில் நடைபெற்ற போர் தொடர்பாகவும்  2016 இல் நடைபெற்ற அமெரிக்கத் தேர்தல் தொடர்பான செய்திகளையும் வழங்குவதற்கு ஷெரீன் தவறவில்லை.

பேர்ஸெயிற் (Bir Zeit) பல்கலைக்கழகத்தில் ஊடகப்பயிற்றுவிப்பாளராக


பேர்ஸெயிற் பல்கலைக்கழகத்தின் ஊடக அபிவிருத்தி நிலையத்தில் அபூ அக்ளே ஒரு பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார். ஊடகப் பீடத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு அத்துறை தொடர்பான பல கற்கைநெறிகளை ஷெரின் நடத்தினார்.

எண்ணிம ஊடகப்பணி (digital journalism) தொடர்பாக அந்தப்பல்கலைக்கழகத்திலிருந்து 1997 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டயக்கற்கைநெறிகளை அவர் நிறைவுசெய்திருந்தார்.

பேர்ஸெயிற் பல்கலைக்கழகத்தின் ஊடகக்கற்கைநெறிகளுக்கு ஷெரீன் காலடி எடுத்துவைத்த போது, எங்களில் சிலர் மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானோம். காரணம் என்னவென்றால் அவர் அல்ஜஸீரா செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த நிபுணத்துவம் வாய்ந்த ஓர் மூத்த ஊடகவியலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்று பாலஸ்தீன ஊடகவியலாளர்களில் ஒருவரான முஜாஹெட் மொவ்ள் தெரிவித்தார்.
Shireen 2 ஷெரீன் அபு அக்ளேயின் (Shireen Abu Akleh) ஊடகவியல் சாதனைகள் | தமிழில்: ஜெயந்திரன்

படிப்படியாக ஷெரீனின் குணவியல்புகளை நாம் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது. புதிய விடயங்களைக் கற்று அறிந்து, தனது ஊடகவியல் திறன்களை வளர்த்துக்கொள்ள எப்போதுமே ஆர்வமாயிருந்த ஒரு மிகவும் அன்பான, தாழ்மைப் பண்பைக்கொண்டவர் ஷெரீன் என்பதை எம்மால் பின்னர் அறியக்கூடியதாகவிருந்தது.

அபூ அக்ளேயின் சாவின் பின்னர், அவரைக் கௌரவிக்கும் முகமாக ஊடகத்துறையில் சாதனை படைக்கும் பெண்களுக்கான ஒரு புலமைப்பரிசில் நிதியை பேர்ஸெயிற் பல்கலைக்கழகம் தற்போது அறிவித்திருக்கிறது. வேறு பல விடயங்களையும் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
Shireen ஷெரீன் அபு அக்ளேயின் (Shireen Abu Akleh) ஊடகவியல் சாதனைகள் | தமிழில்: ஜெயந்திரன்
சாவுக்குப் பின்னரான விருதுகள்


ஜெரூசலேமின் விண்மீன் (Star of Jerusalem) என்ற பரிசை பாலஸ்தீன நிர்வாகம் அபூ அக்ளேக்கு வழங்கியிருக்கிறது. பாரம்பரியமாக இப்பரிசு அரசியலில் முன்னணி வகிப்போருக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

ஊழலுக்கு எதிரான அமைப்பான ஆமான் (Aman), புலனாய்வு ஊடகத்துறைக்கான ( Investigative Reports) பரிசை அபூ அக்ளேக்கு வழங்கியிருக்கிறது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் பிடியில் தமது வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கின்ற மக்கள் தொடர்பான செய்திகளை வழங்கி வரும் முன்னணி பாலஸ்தீன ஊடகவியலாளர்களுக்கு வழங்கவென்று பேர்ஸெயிற் பல்கலைக்கழகம் ஓர் வருடாந்த ஷெரீன் அபூ அக்ளே விருதையும் அறிவித்திருக்கிறது.

நன்றி: அல்ஜஸீரா

Leave a Reply