ஷவேந்திர சில்வாவிற்கு மற்றுமொரு நாடும் தடை விதிக்க திட்டம்!

393 Views

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா படைத் தளபதிகளுக்கு பிரித்தானிய அரசும் பயணத் தடைகளை விதிப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களை பிரித்தானியாவிற்குள் நுழையவிடாது தடை விதிப்பது தொடர்பான நகர்வை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜொன்சன் தலைமையிலான தற்போதைய கொன்சவேடிவ் கட்சி அரசாங்கம் இன்னமும் நிராகரிக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மெக்னிட்ஸ்கை பாணியில் தமது அரசாங்கத்தினால் வடிவமைக்கப்படும் உலகளாவிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான தடைப் பட்டியலை உருவாக்கும் தமது நோக்கத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பயணத் தடை விதிப்பது தொடர்பிலான சாத்தியங்கள் குறித்தும் பிரித்தானிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.

இதற்கு எழுத்து மூலம் நாடாளுமன்றத்திற்கு பதில் வழங்கியுள்ள பிரித்தானியா வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகல் இராஜாங்க அமைச்சர் நைஜல் அடம்ஸ், அதற்கான சாத்தியங்களை நிராகரிக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்வரும் மாதங்களில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இரண்டாம் நிலைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது தொடர்பான ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சாத்தியமான பெயர்கள் குறித்து கருத்து வெளியிடுவது பொருத்தமற்றது என பிரித்தானியா வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கான இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு 30 இன் கீழ் ஒன்று, 34 இன் கீழ் ஒன்று மற்றும் 40 இன் கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்கள் ஊடாக பிரித்தானியா ஒத்துழைப்பை வழங்கியதாக நைஜல் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்மானங்களில் உள்ளவாறு ஸ்ரீலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் அனைத்து தரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கான பொறிமுறையை அமைப்பதே சிறந்த வழி என்றும் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாகவே ஸ்ரீலங்காவில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க இலக்குகளை எட்ட முடியும் எனவும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள பதிலில் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெப்ரினன் ஜெரனல் ஷவேந்திர சில்வா ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கரிசனையை தெரிவித்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட கூட்டறிக்கையையும் நிஜல் அடம்ஸ் நினைவூட்டியுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளதையும் அந்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கா தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உள்ளடங்கலாக பொறுப்புகூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களின் முக்கியத்துவத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் எனவும் நைஜல் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியாவிற்கான அமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இந்த விடயங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply