வெளி மாவட்டத்து கடலுணவுகள் விற்பனைக்கு பொன்னாலையில் தடை

514 Views

பொன்னாலைக் கடலில் பிடிக்கப்படும் கடலுணவுகளை மாத்திரம் பொன்னாலை சந்தையில் விற்பனை செய்வது என்றும்,  சந்தை வளாகத்தில் இதுவரை கடலுணவுகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு மாற்று ஒழுங்கு செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர், பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா மற்றும் உறுப்பினர் து.சுஜிந்தன், கடற்றொழில் பரிசோதகர், கிராம சேவையாளர் உட்பட தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலிலேயே மேற்கண்ட  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை இறங்குதுறையில் வடக்கு மாகாண சபை நிதியில் அமைக்கப்பட்ட சந்தையிலும் சந்தை வளாகத்திலும் அண்மைக்காலமாக மன்னார் மற்றும் யாழ். மாவட்டத்தின் ஏனைய இடங்களில் கொள்வனவு செய்யப்பட்ட கடலுணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

ஆரம்பத்தில் சில வியாபாரிகள் மாத்திரம் இவ்வாறான வியாபார நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் தற்போது அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பரம்பரை பரம்பரையாக இப்பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், தங்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை உரிய விலைக்கு சந்தைப்படுத்த முடியவில்லை என முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் தாங்கள் மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் எனவும் தமது குடும்பங்கள் வாழ்வாதார நெருக்கடியை எதிர்நோக்கவேண்டி வரும் எனவும் தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டனர்.

இந்நிலையில், பொன்னாலைக் கடலில் தொழில் செய்யும் ஸ்ரீகண்ணன் மற்றும் நாராயணன் ஆகியோரும், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் தொழிலாளர்களும் இணைந்து கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை முதல் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் கடலுணவுகளை விற்பனை செய்யவேண்டாம் என வியாபாரிகளுக்கு தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதுடன். கடலுணவுகளை விற்பனை செய்யும் வியாபாரிகளும் பிரதேச சபையின் சந்தையை ஏலத்தில் எடுத்தவரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதேச சபை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை குறித்த சந்தையில் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இரு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

தாம் பரம்பரையாக பொன்னாலைக் கடலில் தொழில்செய்து வருவதையும் இதுவே தமது வாழ்தாரம் என்பதையும் எடுத்துரைத்த தொழிலாளர்கள் அண்மைக்காலமாக வெளி இடத்து மீன்கள் இங்கு விற்பனைக்கு வருவதால் தமது கடலுணவுகளை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டினர். இதனதால் இதற்கு நிரந்தர முடிவு ஒன்று எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். வியாபாரிகளும் தமக்கு சந்தை அவசியம் எனக் கூறினர்.

இந்நிலையில், குறித்த சந்தையில் இனிமேல் வெளியிடத்து கடலுணவுகளை விற்பனை செய்வதில்லை எனவும் பொன்னாலைக் கடலில் பிடிக்கப்படும் கடலுணவுகளை மாத்திரம் விற்பனை செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு விரைவில் மாற்று ஒழுங்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும்  இதற்காக பிரதேச சபையில் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்வதாகவும் செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் – யாழ்.தர்மினி

Leave a Reply