வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் – சுருதி

1,122 Views

telesur  என்ற ஊடகத்தின் தொலைக்காட்சியில் எம்பயர் ஃபைல்கள் என்ற தொடரை நடத்தும் அபி மார்ட்டின் என்ற அமெரிக்கர் அண்மையில் வெனிசுவேலாவிற்கு சென்றுவந்து கொடுத்த அறிக்கை வெனிசுவேலா பற்றி வேறொரு பார்வையை தருகிறது.

மையநீரோட்ட ஊடகங்கள் இன்று வெனிசுவேலா பற்றி என்ன சொல்லிக்கொண்டு வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். உணவு உட்பட அடிப்படை தேவையான பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் தொகையாக அந்த நாட்டிலிருந்து வெளியேறுகிறார்கள். எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த நாட்டிற்கு ஏன் இந்த நிலைமை. அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் கோபம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக கொதிநிலையில் இருந்தது. இப்போது இது மேலும் அதிகரித்து வருகிறது.

வெனிசுவேலாவின் எதிர்கட்சி சனாதிபதி மதூரோவை பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கிறது. மதூரோவும் அவரின் முன்னோடியான ஹகோ சாவேசும் தான் இன்றைய வெனிசுவேலாவின் நிலைமைக்கு காரணம் என்கிறார்கள் எதிர்கட்சியினர். நாளாந்த தேவைகள் கிடைக்காததால் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நம்பிக்கை இழந்த வெனிசுவேலர்கள் ஐ-அமெரிக்காவை நோக்கி வருகிறார்கள். ஐ-அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின்படி 2015இல் இங்கு வந்த வெனிசுவேலர்களில் பன்னிரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமது நாட்டுக்கு திரும்பாமல் இருக்கிறார்கள்.

இதுதான் இன்று மையநீரோட்ட ஊடகங்கள் சொல்லிவரும் செய்தி. அபி மார்டின் என்ன சொல்கிறார்.மக்கள் தப்பியோடுகிறார்கள். அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. உண்மைதான். ஆனால் இவற்றின் பின்னாலுள்ள பெரிய விடயங்களை இவை நடப்பதற்கான காரணங்களை அவதானிக்க வேண்டும் என்கிறார் இவர். இதோ இவர் சொல்வது.

இந்த பிரச்சனையை பல அடுக்குகளாக அலச வேண்டும். சாவேஸ் முன்னெடுத்த மதுரோவால் தொடரப்படும் மக்களிடம் பிரபலமான வெனிசுவேலாவின் கொள்கைகளின் தோல்வியாகவே ஐ-அமெரிக்க கார்பரேட் ஊடகம் எப்போதும் இதை காட்டுகிறது. களத்தில் உண்மையான தரவுகளை பார்க்க வேண்டும். வெனிசுவேலாவின் ஏழை மக்கள் வெனிசுவேலா அரசை ஆதரிக்கிறார்கள். கார்பரேட் ஊடகம் தொடர்ச்சியாக போதிப்பது போல சர்வாதிகாரம் அங்கில்லை. தேர்தல்கள் நேர்மையாகவே நடக்கின்றன. எதற்காக ட்ரம்ப் அரசு, ஒபாமா அரசு மற்றும் நவதாராளவாத கார்பரேட் ஊடகம் எல்லாமே வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றம் தேவை என்கிறது.

உண்மை என்னவென்றால் 1999இல் சாவேஸ் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஐ-அமெரிக்கா வெனிசுவேலா ஆட்சி மாற்றத்திற்கு முயற்சிக்கிறது. புஸ் அரசு வெனிசுவேலா எதிர் கட்சியுடன் சேர்ந்து 2003இல் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சித்தது. அப்போது அது சாவேஸை துப்பாக்கி முனையில் கடத்தியது.wn20130414p1a வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் - சுருதி

அப்போது அதில் எதிர்கட்சியின் பங்கையும் பார்க்க முடிந்தது. எதிர் கட்சி உடனடியாக ஒரு புதிய அரசியல் சாசனத்தை அமுலாக்கியது. அதில் வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் தனியார் மயமாக்கப்பட்டது. இதை 2003 இல் நாம் பார்த்தோம். அப்போதிலிருந்து ஐ-அமெரிக்கா 50 மில்லியன் டொலர்களை எதிர்கட்சிக்கு கொடுத்திருக்கிறது. புஸ் அரசும் ஒபாமா அரசும் எதிர் கட்சி பிரதிநிதிகளை மீண்டும் மீண்டும் சந்தித்து வந்தார்கள்.

அத்துடன் வெனிசுவேலாவின் பிரச்சனைகள் தென்னமெரிக்க நாடுகள் எல்லாவற்றிற்கும் பொதுவான பிரச்சனைகளும் தான். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த காலனியாதிக்கம். சொந்த காலில் நிற்க முடியாமல் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்தில் அளவுக்கதிகமாக தங்கியிருந்தது. இவை லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும். வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை அதன் எண்ணெய் வருமானம் அளவுக்கதிகமாக தாங்கி பிடித்தது. எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த பின்னர் எவ்வாறு தங்கள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது என்று அவர்கள் இப்போது முயற்சிக்கிறார்கள்.

வெனிசுவேலாவின் பிரச்சனையை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று சோசலிச கொள்கைகளின் தோல்வியாக. மற்றைய பார்வை ஏழ்மையான இடங்களில் இருக்கும் மக்கள் சொல்வது. உண்மையில் இது ஒரு வர்க்க போராட்டம் தான். ஊடகங்கள் எல்லாவற்றையும் திரித்து சொல்வதாக இந்த மக்கள் சொல்கிறார்கள். அங்குள்ள முதலாளிகள் பொருட்களை பதுக்குகிறார்கள். அங்குள்ள மிகப்பெரிய கம்பனிகள் ஒரு பொருளாதார போரை நடத்துகிறார்கள். அங்குள்ள ஒரு கம்பனிதான் பொலார்ட். அதன் அதிகாரி ட்ரம்ப் ஆதரவாளர். மதுரோவுக்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்காக வெளிப்படையாக இயங்குகிறார். அங்கு நான் எட்டு சூப்பர் மார்க்கட்டுகளுக்கு போனேன்.

ஏழ்மையான இடத்திலும், நடுத்தர இடத்திலும் பணவசதியுள்ள இடத்திலும் போனேன். அங்கு உணவு தட்டுப்பாடு இல்லை. குறிப்பிட்ட சில உணவு வகைகளுக்கு மட்டும் தட்டுப்பாடு. எண்ணெய், மா, பற்பசை, கழிவறை பேப்பர் போன்றவைகள். ஏன் இப்படி குறிப்பிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு. பழங்கள், இறைச்சி போன்றவை எல்லாம் கிடைக்கின்றன. சூப்பர் மார்கெட்டில் பேப்பர் டவல் பேப்பர் நப்கின் இருக்கின்றன. ஆனால் கழிவறை பேப்பர் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருவது என்னவெனில் இவைகளை முதலாளிகள் பதுக்கிறார்கள். அல்லது கொலம்பியாவுக்கு அனுப்புகிறார்கள்.

கிளப் எனப்படும் அரசாங்கம் கொடுக்கும் உணவு மானிய பெட்டியில் உள்ள பல பொருட்களுக்கு பொலார்ட் கம்பனி தான் பொறுப்பு. இதை மிகவும் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மானிய அடிப்படையில் அரசாங்கம் கொடுக்கிறது. அந்த உணவு பெட்டியில் உள்ள பொருட்கள் பலவற்றை பொலார்ட் உற்பத்தி செய்கிறது. அவற்றை இந்த கம்பனி பதுக்கிறது.

முதலாளிகள் இப்படி செய்ய மாட்டார்கள் என்று பலர் என்னோடு வாதிட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் இந்த கதைகளுக்கு இரு பக்கம் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே கேட்கிறோம். இந்த பிரச்சனையை ஊதிவிட அமெரிக்கா செய்வதைப் பற்றி எங்கள் காதில் எதுவும் விழுவதில்லை. முதலாளிகளின் பொருளாதார போர் மட்டுமல்ல. வெனிசுவேலாவின் மேல் போட்டுள்ள தடைகளும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். ஐ-அமெரிக்கா வெனிசுவேலாவின் எதிர்கட்சியுடன் சேர்ந்து வெனிசுவேலா கடன் எடுப்பதையும் தடுக்கிறது.

எண்ணெய் வளத்தின் மேல் வெனிசுவேலா இருக்கிறது என்பதற்கும் அப்பால், சாவேஸ் தனது சோசலிச கொள்கைகளால், அடிமட்ட மக்களை தூக்கிவிட்டு அவர்களின் குரல்களையும் கேட்க செய்தார். நூற்றாண்டுகளாக பொருளாதாரத்தை தங்கள் கையில் வைத்திருந்தவர்களால் இந்த ஏழை மக்கள் அடக்கப்பட்டார்கள். சாவேஸ் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட போது வெனிசுவேலா பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டு கொண்டிருந்தார்கள். மில்லியன் கணக்கான ஏழைகள் சாவேசின் பின்னால் அணிசேர்ந்தார்கள். பூர்வகுடிகள், ஆபிரிக்க வெனிசுவேலர்கள், ஏழைகள் எல்லோருடைய குரல்களையும் சாவேஸ் கேட்கும்படி செய்தார். இதற்கு முன்னர் இவர்களின் குரல்கள் கேட்கப்படவில்லை. இன்று நாங்கள் பார்ப்பது ஒரு வர்க்க போராட்டம் தான். பல ஆயிரம் மக்கள் மதூரோ அரசுக்கு எதிராக வீதிகளில் போராடுகிறார்கள். இவர்கள் பெரும்பான்மையாக வெள்ளையர்கள். நடுத்தர வர்க்கத்தினர். கொஞ்சம் பணவசதியுள்ளவர்கள். மறுபக்கம் பல ஆயிரம் மக்கள் அரசை ஆதரிக்கிறார்கள்.bd7b670ec19b444bb72e90fbf9fa7af6 18 வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் - சுருதி

இவர்கள் ஏழைகள். ஆபிரிக்க வெனிசுவேலர்கள். ஏழைகளின் நிலையை உயர்த்தும் கொள்கைகள் டொமினோ மாதிரி ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் பரவும் என்பதால் ஐ-அமெரிக்காவுக்கு இதுவும் பிடிக்காது.

நான் இன்னுமொரு விடயமும் சொல்வேன். மதுரோ தேர்தலில் 5 மில்லயன் வாக்குகளால் வெற்றி பெற்றார். டிரம்ப் அரசாங்கம் வெனிசுவேலாவின் எதிர்கட்சியை போட்டியிட வேண்டாம் என்று கெஞ்சி நிறுத்தியது. இதனால் எதிர்கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

மதுரோவின் தெரிவு நேர்மையற்றது என்று காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்கள். மதுரோ எதிர்ப்பு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால், அவர் சர்வாதிகாரி என்று கதை பேசுவதற்கு இதுவும் பலம் கொடுக்கும். கடைசி நேரத்தில் இருவர் மதுரோவுக்கு எதிராக தேர்தலில் நின்றார்கள். மதுரோ சர்வாதிகாரி என்று சொல்வதை இது பொய் என்று நிரூபித்தது. இதுதான் எதிர்கட்சியின் தந்திரோபாயம். சனநாயகத்திற்கு எதிரான வழிகளில் அதிகாரத்தை கையில் எடுப்பதுதான் அது. வீதிகளில் வன்முறைகள் நிறைந்த போராட்டங்கள் வெடிக்கிறது. பலர் அமைதி வழியில் போராடுகிறார்கள். உண்மைதான். ஆனால் கருப்பின சாவேஸ் ஆதரவாளர்களையும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் தாக்கி வருகிறார்கள். சோசலிஸ்டுகளை கொலை செய்கிறார்கள். வெனிசுவேலா அரசின் அடையாளங்களை, பிரசவ வைத்தியசாலைகள், உணவு விநியோகிக்கும் இடங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கிறார்கள்.

இங்குதான் ஐ-அமெரிக்காவின் கதையின் பொய்கள் வெளிவருகின்றன. ஐ-அமெரிக்கா பட்டினி கிடக்கும் மக்களுக்காக என்று பேசுகிறது. அவர்களுக்காக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறது. ஆனால் இந்த மக்கள்தான் வெனிசுவேலா அரசை ஆதரிக்கிறார்கள். இந்த மக்களை ஐ-அமெரிக்கா கையாழும் விதம் மிகவும் இழிவானது.

எனக்கு ஆழ்ந்த வருத்தம் தருவது என்னவெனில் ஒரு நாடு இருக்கிறது. அங்கு பெரும் பட்டினி நடக்கிறது. அந்த நாட்டுக்கு பெயர் யெமன். நாசி ஜெர்மன் படுகொலைகளைவிட மூன்று மடங்கு மக்கள் அங்கு சாகப்போகிறார்கள். அதை புறந்தள்ளி வெனிசுவேலாவில் மனித உரிமை பற்றி தாங்கள் கவலைப்படுவது போல காட்டுவது. இழிவிலும் இழிவு. அமெரிக்கர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனாலும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லும்போது அதை நம்புவதற்கு எங்கள் மூளை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை தாண்டி இங்கு வேறொரு பக்கமும் இருக்கிறது என்று அறிவதற்கு இதை மறுத்து பேசும் முற்போக்கு ஊடகங்களும் எம்மிடையே இல்லவே இல்லை.

மிகவும் அதிசயமான விடயம் என்னவெனில் தடைகள் எதற்காக போடப்பட்டனவோ அதை அது செய்கிறது. பிரச்சனையை தடைகள் இன்னும் மோசமாக்கி உணவும் மருந்தும் கிடைப்பதை இன்னும் கடினமாக்குகிறது. தடைகளை போட்டு அதன் விளைவுகளை காட்டி ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம். இந்த நஞ்சு வட்டத்தை எதிர்த்து இனி போதும் என்று நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

 

 

 

Leave a Reply