வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் உட்பட இருவர் கைது

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன் நேற்று சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை விசாரணை ஒன்றுக்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிஸாரால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தின் பூசாரியார் மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.