கடன்மறுசீரமைப்பு தொடர்பான இலங்கையின் உத்தியோகபூர்வ கோரிக்கையை அடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக 17 நாடுகளை உள்ளடக்கிய இலங்கையின் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு உத்தரவாதமளித்துள்ளது.
இலங்கைக்குக் கடன் வழங்கிய 17 நாடுகள் ஒன்றிணைந்து இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைமையில் ஸ்தாபித்துள்ள உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவின் முதலாவது கூட்டம் செவ்வாய்கிழமை (09) நிகழ்நிலை முறைமையில் நடைபெற்றது. இந்த உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவில் பாரிஸ் கிளப்பில் அங்கம்வகிக்கும் கடன்வழங்குனர் நாடுகளும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர் நாடுகளும் உள்ளடங்குகின்றன.
இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கான கடன்மறுசீரமைப்புச் செயற்திட்டமொன்றை வெளியிட்டிருந்தன. அதனையடுத்து கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு இலங்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலிக்கும் நோக்கிலேயே நேற்று முன்தினம் இம்முதலாவது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கை அதிகாரிகள் கடன்மறுசீரமைப்பு தொடர்பான தமது உத்தியோகபூர்வக் கோரிக்கையை சமர்ப்பித்தனர். அதுமாத்திரமன்றி கடன்வழங்குனர்களிடம் வெளிப்படைத்தன்மையைப் பேணும் அதேவேளை, அவர்களை ஒரேவிதமாகக் கையாள்வதற்கான தமது கடப்பாட்டையும் இலங்கை அதிகாரிகள் மீளுறுதிப்படுத்தினர்.
அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கையின் அண்மையகால நுண்பாகப்பொருளாதார அபிவிருத்திகள் குறித்தும், இலங்கையுடனான தமது தொடர்பு குறித்தும் தெளிவுபடுத்தினர்.
மேலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாரிஸ் கிளப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்துக் கடன்வழங்குனர்களையும் ஒரேவிதமாகக் கையாளும் அதேவேளை, வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுமென உத்தரவாதமளித்து கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அனைத்துக் கடன்வழங்குனர்களுக்குமான திறந்த கடிதம் குறித்து இதன்போது உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு அவதானம் செலுத்தியது. அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடனான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையை உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு வரவேற்றது.
மேலும் சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்தின் வரையறைகளுக்குள் இலங்கையின் வெளியகக் கடன்நெருக்கடிகளுக்குப் பொருத்தமான தீர்வொன்றைக் கண்டடைவதை முன்னிறுத்தி; அக்குழு தொடர்ந்து செயற்படும். அத்தோடு தனியார் மற்றும் இருதரப்புக்கடன்வழங்குனர்கள் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கடன்மறுசீரமைப்புச் செயன்முறையொன்றை சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாரிஸ் கிளப்பில் உள்ளடங்காத இலங்கையின் இருதரப்புக் கடன்வழங்குனர்களான சீனா, சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அவதானிப்பாளர்களாகக் கலந்துகொண்டன.