இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளில் வாழ்ந்த மக்களின் நிலைமை தெரியாமல் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி கருத்து தெரிவிக்கக் கூடாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், அச்சுவேலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய யாழ்மாவட்டத்தில் இராணுவத்தினால் பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டும் மக்கள் குடியேறவில்லை என கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் முகமாக கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-
வலி வடக்கு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் மக்களின் காணிகளை ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காரணத்தினால் நிர்கதிக்குள்ளான மக்கள் தமது வாழ்வாதரங்களை இழந்து அகதிமுகாம்களில் அவல வாழ்வு வாழ்ந்துவந்த நிலையில் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளில் எவ்வாறு உனடியாகவே குடியேற முடியும்? என்பதனையும் குறித்த காணிகளில் வாழ்ந்த மக்கள் காணிகளை விட்டுவிட்டு மேற்கத்தைய நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்கவில்லை. இந்த நாட்டில் அகதிமுகாம்களில்தான் வாழ்ந்தார்கள் என்பதனை குறித்த கட்டளைத்தளபதி
உணர்ந்துகொள்ள வேண்டும்.
இராணுவம் தமது முகாம்களைவிட்டு வெளியேறிய போது பதிய இடத்தில் முகாம்களை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சினூடாக நிதியை வழங்கிய அரசாங்கம் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தால் தமது பூர்வீக நிலங்களில் எமது மக்கள் குடியேறி நின்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.
ஏற்கனவே தமது வாழ்வாதார மூலமான நிலத்தை இழந்து அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்துவந்த மக்கள் தமக்கு வாழ்வாதாரத்தை ஈட்டித்தந்த நிலங்களை இழந்திருந்தமையினால் கூலி வேலைகளுக்கு சென்று தமது அன்றாட ஜீவனோபாயத்தை கவனிக்க முடிந்ததே தவிர அவர்களால் உடனடியாக ஒரு வதிவிடத்தை அமைத்துக்கொள்வதற்கான வங்கி மீதிகளை கொண்டிருக்கவில்லை.
ஏற்கனவே தமது வாழ்வின் பெரும்பகுதியை நிலமீட்பு போராட்டத்தில் செலவுசெய்த மக்கள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நகர்வுகளின் பயனாக கடந்த ஆட்சிக்காலத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் காணிகள் விடுவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் கடந்த ஆண்டில் சஹரான் குழுவின் தீவிரவாத தாக்குதலினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் என நாடு இயல்புநிலையை இழந்திருந்த காரணத்தினால் கூலித்தொழில்களையே இழந்திருந்த மக்கள் எவ்வாறு மீள்குடியேற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்?
இவற்றை கருத்திற்கொள்ளாமல் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி வெளியிட்டுள்ள கருத்து யதார்த்த முரணானது. இவரது இந்த கருத்தில் இராணுவம் தம்வசமுள்ள மீதியாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிக்காமல் தவிர்ப்பது அல்லது காணிகளை கையகப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
பெரும் போராட்டங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் எமது மக்கள் முழுமையாக குடியேறி வாழ்வை தொடர்வார்கள். அவர்களின் தற்போதைய நிலையை உணராத கருத்துக்களை கூறுவது விசமத்தனமானது என்பதுடன் எமது மக்களின் இந்த நிலைக்கு காரணமானவர்களே தற்போது இப்படியான கருத்து தெரிவிப்பது வேடிக்கையானதே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.