விடுதலைப் புலிகள் காலத்தில் கேட்டவற்றையே இப்போதும் கேட்கின்றோம் – சம்பந்தன்

416 Views

புதிய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை தமிழ்க் கட்சிகள் ஆதரிப்பதென்று தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து அவருக்கான வாக்கு வேட்டையில் தமிழ்க் கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.

இதே வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் மக்கள் சந்திப்பும் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா உட்பட தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் முத்துராசா தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசும் போது,

புலிகளை அழித்ததால் எம்மையும், தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர். ஆனால் நாம் இன்றும் கேட்பது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் கேட்டவையே ஆகும். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப் புலிகளின் உரிமைக்காக போராடவில்லை. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலை நாங்கள் நிராகரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டும். எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2005 ஆம் ஆண்டு தேர்தலை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தனர். அவர்கள் வாக்களித்திருந்தால், மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வந்திருக்க மாட்டார்.  மகிந்த ஜனாதிபதியாக வந்த 10 வருடங்களில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சொல்லவே முடியாது.

அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும், அரசியல் தீர்வு தொடர்பாகவும், மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கோத்தபயா ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதி உச்சப் பகிர்வு பற்றி தனது நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

அதி உச்சப் பகிர்வு என்பது முதன்முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்த ராஜபக்ஸ காலத்தில் 2006ஆம் ஆண்டு சர்வகட்சிக் கூட்டத்தில் எல்லோருடனும் பேசிய பின்னர் அவர் உரையாற்றும் போது அதி உச்சப் பகிர்வு மூலம் அடிப்படை தீர்வு காணப்பட வேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால்  எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. தாங்கள் கூறிய விடயத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர்.

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டது. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனை மக்கள் ஏற்கக் கூடாது என அவர்கள் கூறுகின்றனர் என இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply