வல்லை இராணுவ முகாம் முன்பாக இடம்பெற்ற குண்டு வெடிப்பு; நீர்வேலி இளைஞன் கைதாகி விசாரணையில்

வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து யாழ். ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் பின்வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன;

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அந்தப் பொம்மையை ஆராய்ந்தபோது அது வெடித்ததில் படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்தார். அவர் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் அவ்விடத்துக்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை எனப் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை சி.சி.ரி.வி. கமெரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர், நேற்றுக் காலை நீர்வேலி பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்புகளால் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேக நபரை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்தனர்.