வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறும், நீதி கோரியும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2230 நாட்கள் கடந்துள்ள நிலையில், சர்வதேசம் நீதி பெற்றுத்தர வே்ணடும் என தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின் போது கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி குறிப்பிடுகையில்,

இலங்கை அரசு போராட்டங்களை நசுக்குவதற்கு பல்வேறு விடயங்களை கையாண்டு வருகின்றது. எமது போராட்டங்களை மாத்திரமல்ல, ஏனைய போராட்டங்களிற்கும் அவ்வாறே செயற்படுகின்றது.

விசாரணைகளிற்காக அழைப்பதும், நீதிமன்ற வழக்குகளை தொடருவதும் என தொடர்கின்றது.

இந்த நிலையில், எமது பிள்ளைகளிற்கு நீதி கோரி நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.  இரண்டு  இலட்சம் தருவதாக கூறுகின்றனர். அந்த 2 இலட்சம் எமக்கு வேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.