மீண்டும் ஒரு பனிப்போர் அல்லது அதனையும் தாண்டிய முழுஅளவிலான மூன்றாவது உலகப்போருக்கான நகர்வுகளா உலகில் இடம்பெற்றுவருகின்றன என்ற கேள்விகள் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு உருவாகிய உக்ரைன் – ரஸ்ய போர் அதாவது நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான மோதல்கள் மேலும் விரிவாக்கம் பெற்றுவருகையில் கடந்த ஆண்டு ஆரம்பமாகிய இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஒரு நீண்ட காலப்போருக்குள் தள்ளும் ஆபத்துக்களை ஏற்படுத்திவருகின்றது.
இந்த வாரம் ஐந்தாவது தடவையாக ரஸ்யாவின் அரச தலைவராக பதவியேற்றுள்ள அதிபர் விளமிடீர் பூட்டீன் ரஸ்யாவை அழித்துவிட வேண்டும் என முழு மேற்குலகமும் திட்டமிட்டு செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார். களைப்படையாமால் உக்ரைனுக்கு நிதியையும், ஆயுதங்களையும் அள்ளி வழங்கும் அவர்கள் ஆயுத பலத்தில் நவீன ஆயுதங்களைக் கொண்ட நாடுகள் எனவும் அதனை முறியடிக்க வேண்டும் என்றால் நாம் ஆயுத தொழில்நுட்ப அறிவில் ஒரு படி முன்னே நிற்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது நாடு எப்போதும் மக்கள் மயப்படுத்தப்பட்ட படைத்துறை கட்டமைப்பாகவே (People’s military industrial complex) செயற்பட்டு வருவதுண்டு. தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளது. அதாவது போர் என்பது மக்கள் மயப்படுத்தப்பட்டது என்பது அவரின் சிந்தனை. தற்போதைய போரில் பயன்படுத்தப்படும் ஆளில்லாத தாக்குதல் விமானங்களை முறியடிப்பதற்கு மக்களின் பங்களிப்பு அவசியமானது என்பது அவரின் கருத்து. அதேபோலவே மேற்குலக நாடுகளும் போரை மக்கள் மயப்படுத்தும் திட்டங்களை மெல்ல மெல்ல முன்னெடுத்து வருகின்றன.
பிரித்தானியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஆளில்லாத தாக்குதல் விமானங்களை குழம்பும் அல்லது முறியடிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதேசமயம் குறுகிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் (Tactical nuclear weapons) அணுவாயுதங்களை கொண்டுள்ள தமது படையினரின் பயிற்சி ஒத்திகை ஒன்றை அண்மையில் ரஸ்யா மேற்கொண்டிருந்தது.
கடற்படை, வான்படை மற்றும் ஏவுகணைப் படைப்பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட இந்த பயிற்சி என்பது நாட்டிற்கு வரவுள்ள ஆபத்துக்களை முறியடித்து அதன் இறமையை காப்பாற்றுவது என்பதாகும் என ரஸ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெறும் போரில் உக்ரைன் வீழந்தால், அங்கு நேட்டோ படையினர் அனுப்பப்படுவார்கள் அல்லது பிரான்ஸ் படையினர் அனுப்பப்படுவார்கள் என பிரான்ஸின் அதிபர் அமானுவேல் மக்ரோன் கூறிய கருத்துக்கு பதிலடியாகவே ரஸ்யா இந்த தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. அதாவது நேட்டோ படையினரை எதிர்கொள்ள ரஸ்யா தயாராகி வருகின்றது.
உக்ரைனில் நேட்டோ படையினர் களமிறங்கப்போவதில்லை எனவும் அது தொடர்பில் உக்ரைன் தம்மை கேட்கவில்லை எனவும் நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்ரொலன்பேர்க் இந்த வாரம் தெரிவித்துள்ள அதேசமயம், நேட்டோ படையினர் ரஸ்யாவுடன் நேரிடையாக மோதாது உக்ரைனில் இருந்து உக்ரைன் படையினருக்கு உதவிவருவதாக போலந்தின் அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் உக்ரைனுக்கு 300 கி.மீ துராவீச்சுக்கொண்ட ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ள அதேசமயம், பிரித்தானியாவும் நீண்டதூர வீச்சுக்கொண்ட ஸ்ரேம் சடோ ஏவுகணைகளை வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாது உக்ரைன் அந்த ஆயுதங்களை தாம் விரும்பியவாறு பயன்படுத்தலாம் என அண்மையில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
அதாவது உக்ரைன் விரும்பினால் ரஸ்யாவின் உட்கட்டுமானங்களை தாக்கலாம் என்பது அவரின் கருத்து. அவரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த ரஸ்யா தாம் பிரித்தானியாவின் இலக்குகளை பல்வேறு நாடுகளில் தாக்குவோம் என தெரிவித்திருந்தது. ரஸ்யா இந்த கருத்தை தெரிவித்த சில நாட்களில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்கள் அனைத்தும் சைபர் தாக்குதல் மூலம் களவாடப்பட்டுள்ளன.
அதனை சீனா செய்ததாக பிரித்தானியாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளபோதும் சீனா அதனை மறுத்துள்ளது. ஆனால் தற்போது உள்ள கேள்வி என்னவெனில் அங்கு திருடப்பட்ட தகவல்களில் பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகத்தின் பணப்பரிமாற்றம் முக்கியமானது. அதாவது பிரித்தானியா யாருக்கு எல்லாம் இரகசியமாக நிதியை வழங்குகின்றது. யார் எல்லாம் பிரித்தானியாவின் இரகசிய முகவர்களாக செயற்படுகின்றனர் என்ற தகவல்கள் எதிரிகளுக்கு உதவலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. அதாவது பிரித்தானியாவின் இலக்குகளை ரஸ்யா தாக்குவதற்கு இந்த தகவல்கள் உதவலாம்.
போர் மேகங்கள் மெல்ல மெல்ல சூழந்த வருகையில் வல்லரசுகள் தமக்கான அணிகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. அதில் முக்கியமானது இந்தவாரம் இடம்பெற்ற சீன அதிபர் சீ ஜின்பிங்கின் ஐரோப்பாவுக்கான பயணம். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இந்த பயணத்தில் அவர் பிரான்ஸ், ஹங்கோரி மற்றும் சேர்பியா ஆகிய நாடுகளை தெரிவுசெய்துள்ளது என்பது நன்கு திட்டமிடப்பட்ட நகர்வாகவே தெரிகின்றது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் சமரில் ஐரோப்பா நடுவில் சிக்கியுள்ளதுடன், அதில் ஏற்படப்போகும் மாற்றத்தை தான் இந்த பயணத்தின் தெரிவு காட்டுகின்றது. ஐரோப்பிய நாடுகள் முற்றாக அமெரிக்காவுடன் நிற்பதை தவிர்ப்பதே சீனாவின் அண்மைக்கால வெளிவிவகாரக் கொள்கையாக உள்ளது.
ஜேர்மனின் தலைவர் சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தனது வர்த்தகக் குழுக்களுடன் சென்றபோதும், ஜேர்மனி தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கொள்கைகளை பரப்புவதால் சீன அதிபர் தனது பயணத்தில் ஜேர்மனியை தவிர்த்துள்ளது ஒரு மாற்றமாக பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் நிதி உதவியுடன் இயங்கும் சிந்தனைக்குழாம் என்ற நிறுவனம் ஜேர்மனிக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்களை தீவிரமாக வளர்த்துவருவதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் முழு ஐரோப்பாவிலும் ஹங்கோரி சீன சார்புள்ள நாடாக உள்ளது. அது ரஸ்யாவுடனும் நல்லுறவுகளைளேயே கொண்டுள்ளது. அது சிறிய நாடு என்பதால் ஐரோப்பிய கூட்டணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும் பல்கனுக்கு மேலாக மத்திய ஐரோப்பாவில் அதன் அமைவிடம் சீனாவின் வர்த்தக நலன்களுக்கு முக்கியமானது. ஐரோப்பாவில் சீனாவுக்கான கதவுகள் மூடப்பட்டால் அதனை இலகுவாக ஹங்கேரி ஊடாக சீனா சரிசெய்துவிடும். எனவே தான் அங்கு மின்சார கார் உற்பத்தி நிறுவனத்துடன் கூடிய பல்கலைக்கழகம் ஒன்றை சீனா கட்டி வருகின்றது.
கிறீஸில் உள்ள பிரோஸ் என்ற சீனாவின் துறைமுகத்தில் ஆரம்பிக்கும் சீனாவின் பொருளாதார பாதையில் ஹங்கொரிக்கும் கிறீஸிற்கும் இடையில் சேர்பியா உள்ளது. சேர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாதுவிட்டாலும், 1990 களில் நேட்டோவினால் தாக்குதலுக்கு உள்ளான நாடு என்பதுடன், மேற்குலகத்திற்கும் சேர்பியாவுக்கும் இடையிலான உறவுகளும் நல்லதாக இல்லை.
அங்குள்ள சீன தூதரகம் மீது நேட்டோ விமானங்கள் வீசிய குண்டினால் பலர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் சீன அதிபர் தனது அஞ்சலிகளை செலுத்தியிருந்தார். அதாவது உக்ரைன்-ரஸ்ய போர் ஆரம்பமாகியதில் இருந்து மேற்குலகத்தின் விரிவாகத்கத்தை தடுக்கும் முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.
அதாவது அவர்கள் வரலாற்றை மாற்றவுமில்லை, மறக்கவுமில்லை ஆனால் அதன் அனுபவங்களைக்கொண்டு தமது வழிகளில் வரும் தடைகளை உடைத்து பயணிக்கும் சாதுரியத்தை கொண்டவர்களாக இருப்பதே இங்கு முக்கியமானது.