சுகாதாரத் துறையில் உள்ள பயிற்சியின் பின்னர் நியமனம் வழங்கப்படும் அநேகமான எல்லா துறைகள் அல்லது பதவிகளுக்கும் உயர் தரத்தில் உயிரியல் சித்தியடைந்திருந்தல் அவசியமானது. 2021/22 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதியில் உயிரியல் சித்தியடைந்த மாணவர்களுக்கு 35 பாட நெறிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இது 2022/23 இல் 36 ஆக அதிகரித்துள்ளது.
இதனை விட பல்கலைக்கு தகுதி பெறாத ஆனால் உயிரியல் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதிய, நிறைவு காண் தொழில் வல்லுநர், துணை மருத்துவ சேவைகளில் இணைந்து கற்பதற்கு ஒன்பதிற்கும் மேற்பட்ட துறைகளில் சுகாதார அமைச்சால் நடத்தப்படும் பயிற்சி பாடசாலைகள் உள்ளன. இவற்றில் கற்கும் பொழுதே அலவன்சுடன் பாடநெறிகளை கற்று, அது முடிந்தவுடன் சுகாதாரத் திணைகளத்தில் வேலை வாய்ப்பைப் பெறுகின்ற சந்தர்ப்பமும் உள்ளது.
இத்தனையும் இருந்தும் வடமாகாணத்தில் மாணவர்கள் உயிரியல் துறையில் உயர்தரத்தில் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் வடமாகாண சுகாதாரத் துறைக்கு தேவையான தாதிய, நிறைவுகாண் தொழில் வல்லுநர், துணை மருத்துவ சேவைகளுக்கு தென்பகுதியில் இருந்து இந்த துறைகளில் கல்விகற்று தகுதி பெற்றோரை பெற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்னமும் நிலவுகின்றது.
வடபகுதி மாணவர்கள் போலன்றி தென்பகுதி மாணவர்கள் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வசித்ததாலும் அதிகாலை 3 மணிக்கே எழும்பி இரண்டு மணிநேரம் வரை புகையிரதத்தில் பயணம் செய்து நகர்புறப் பாடசாலைகளுக்குச் சென்று தன்னும் தமது எதிர்காலத்திற்கு தேவையான துறைகளை கூடுதலாக உயர்தரத்தில் தேர்ந்தெடுத்து கற்பதால் அங்குள்ள சுகாதார நிறுவனங்கள் அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன் மேலதிகமாக இருப்பவர்கள் வடக்கில் உள்ள குறைபாட்டைப் போக்க இங்கு அர்ப்பணிப்புடன் கடமையாற் றுகின்றனர்.
ஒருமுறை வைத்திய நிபுணர் ஒருவர் கலந்துரையாலொன்றில் ” எனது வைத்தியசாலைக்கு மருத்துவர் ஒருவர் நியமனம் பெற்று வந்தால் நான் அவரை எனது அலுவலக வாயில் வரை சென்று வரவேற்பேன். இதுவே ஒரு தாதிய உத்தியோகத்தராக இருந்தால் அவரை ரயில் நிலையம் வரை சென்று மாலையிட்டு வரவேற்று ஊர்வலமாக அழைத்து வருவேன்” என்று குறிப்பிட்டது எனது ஞாபகத்திற்கு வருகின்றது. இது வட மாகாண வைத்தியசாலைகளில் தாதியருக்கு நிலவும் பற்றாக்குறையையும், கேள்வியையும் அவருடைய கூற்று வெளிச்சம் போட்டுக் காட்டியது.
2013 அல்லது 2014 ஆம் ஆண்டாக இருக்கலாம். வட மாகாண நிர்வாகத்தை அரசியல் தலைமைகள் தேர்தலில் வென்று பொறுப்பேற்ற பின்னர் ஒருநாள் துறைசார் மாகாண அமைச்சர் தனது அமைச்சில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும், இதர செயற்பாடுகளையும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார். அதில் கலந்து கொண்டிருந்த உறுப்பினர் ஒருவர் திடீரென்று ” என்னைச் சற்று அரசியல் கதைக்க விடுங்கள்.
வடமாகாணத்தில் ஏராளமான சகோதர மொழித் தாதியர்கள் பணிபுரிகின்றார்கள்; இவர்கள் இங்கு திருமண பந்தத்தில் இணைந்தால் இனக்கலப்பு ஏற்படும். இது ஒரு பாரதூரமான நிலைமையாகும்” என்று கூறினார். இதனால் அப்பொழுது ஆதார வைத்தியசாலையொன்றில் வைத்திய அத்தியட்சகராக இருந்த நான் சற்று கடுப்பாகி ” ஐயா எமது தாதியர்கள் இங்கு ஒரு நாளுக்கு 18 மணிநேரம் வரை கடமையாற்ற வேண்டியுள்ளது. சிலர் அத்தனையும் தாண்டி 24 மணிநேரம் தொடர்ச்சியாகக் கடைமையாற்றுகின்றனர்.
கிடைக்கும் விடுமுறைக்கு ஊருக்குச் செல்கின்றனர். எனவே எதுவும் கலந்துவிடாது. நீங்கள் பயமில்லாமல் வீடு சென்று நிம்மதியாக உறங்குங்கள்” என்று குறிப்பிட்டேன்.
அப்பொழுது அது தொடர்பில் துறைசார் மாகாண அமைச்சரும், அதிகாரிகளும் என்னைக் கடிந்து கொண்டாலும் சுமார் எட்டு முதல் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த அதே களநிலைமை இன்று வரை நிலவுவதனை முற்றாக மாற்றியமைக்க எம்மால் முடியவில்லை. இன்றும் தாதியர்கள் 12 தொடக்கம் 18 மணிநேரம் வரை தொடர்ச்சியாகக் கடமையாற்றினால் மாத்திரமே வைத்தியசாலைச் செயற்பட்டுகளை சீராக மேற்கொள்ள முடிகின்றது.
இதனையெல்லாம் எதற்காக இங்கு கூறவிழைகின்றேன் என்றால் அண்மையில் வடமாகாணத்தின் பிரதான வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற மருத்துவத்தவறு, அதனால் நோயாளிக்கு ஏற்பட்ட பாரதூரமான ஈடுசெய்யமுடியாத இழப்பு, அதன் பின்னர் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய அணுகுமுறைகள், அதனால் விரக்தியடைந்த வடமாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்ற தாதியர்கள் பலர் புதிதாக தாதிய ஆட்சேர்ப்புக்கு சுகாதார அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பங்களை நிரப்ப ஆர்வத்துடன் முன்வரும் வடமாகாண இளையோரை ஊக்கமிழகச் செய்யும் விதமாக சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வரும் பரப்புரைகள் என்பன பலத்த விசனத்தையும், கரிசனையையும் ஏற்படுத்தியுள்ளன.
இவை சாண் ஏற முழம் சறுக்கிவிடும் நிலைக்கு வட மாகாண சுகாதாரத்துறையைக் கொண்டு சென்று விடுமோ என்று பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. எனவே இது தொடர்பில் நிர்வாக மட்டத்தில் இருந்து சகலரும் அதே போல சமூகமும் பொறுப்புணர்வுடன் செயற்படுவதே மாகாணத்தின் சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு உகந்தது.
நன்றி: விநோதன் தர்மராஜன்