வடக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன்?

கோத்தபயாவின் வேண்டுகோளிற்கிணங்க அனைத்து மாகாண ஆளுநர்களும் நேற்று தங்கள் பதவி விலகல் கடிதங்களை வழங்கியிருந்தனர்.

இதற்கமைவாக வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் தங்கள் பதவிப் பிரமாணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைவாக

ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரேயும்,

மேல் மாகாண ஆளுநராக சீதா அரம்பேபோலவும்,

வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும்,

சப்ரகமுவ ஆளுநராக டிக்கிரி கொப்பேக்கடுவவும்,

மத்திய மாகாண ஆளுநராக லலித் யு கமகே வும்,

தென் மாகாண ஆளுநராக வில்லி கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமாகாணத்திற்கான ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் முத்தையா முரளிதரனையே வடக்கின் ஆளுநராக பொதுஜன பெரமுன நியமிக்கவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கின் ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்படைத் தளபதியுமான றியர் அட்மிரல் சரத் வீரசேகர நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் ஐ.நா சபையிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக குரல் கொடுத்தவர் என்பதோடு, அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவபப்படுத்தும் இவர், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்றும் அறியப்படுகின்றது.

இருப்பினும் பொதுஜன பெரமுன தனக்கு ஆதரவு தரக்கூடிய ஒருவரையே வடக்கின் ஆளுநராக தெரிவு செய்யும் என நம்பப்படுகின்றது. இவ்வாறு நியமிப்பதன் மூலமே தனது திட்டங்களை வடக்கில் செயற்படுத்த முடியும் என்பது கோத்தபயாவிற்கு நன்கு தெரியும்.