வடகிழக்கு மக்கள் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கக்கூடிய மனோநிலையில்  இல்லை – அரியநேத்திரன்

660 Views

வடகிழக்கு மக்கள் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கக்கூடிய மனோநிலையில்  இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரி ஞானசாரதேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் இவ்வாறான அடாவடித்தனங்களை தொடர்ந்து செய்வதற்காகவே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நடைபெறவிருக்கின்ற 8ஆவது ஜனாதிபதி தேர்தலிற்காக இரண்டு பிரதான கட்சிகள் தங்களின் வேட்பாளர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். தேர்தல் ஆணையகத்தின் அறிக்கையின்படி 20பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அதற்கான பணத்தினை அவர்கள் செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை கடந்தகால ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எடுத்த முடிவிற்கும் தற்போது நாங்கள் எடுத்திருக்கின்ற முடிவிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. 2005ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் ஜனாதிபதி தேர்தலானது நடைபெற்றபோது பெரும்பாலான மக்கள் ரணிலை ஆதரிப்பதற்கு தயாராக இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரியிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்த முடிவு சரியாகவே இருந்தது.

ஒவ்வொரு களத்திலும் தமிழ்த் தேசிய பலத்தினை வைத்துக்கொண்டு அரசியல் செய்கின்ற தலைமைகள் எடுக்கின்ற முடிவை தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கின்றார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

2005ல் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக வெற்றியீட்டிய பின்னர்தான் தமிழீழவிடுதலைப் புலிகளிற்கு எதிரான போராட்டம் மிக உக்கிரமடைந்திருந்தது. 2006ஆம் ஆண்டில் மாவிலாற்றில் ஆரம்பித்த யுத்தமானது 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் மௌனித்தது.

அதன்பின்னர் 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் யுத்தத்தில் கட்டளையிட்ட மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதா அல்லது களத்தில் நின்று போராடிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதா என்ற சங்கடமான நிலை பலரின் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

நாங்கள் இருதரப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி எழுத்துமூலமான சில உத்தரவாதங்களை பெற்ற பின்னர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக முடிவெடுத்திருந்தோம். வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்,வடகிழக்கு இணைந்த ஒரு தீர்வை தரவேண்டும் என்ற உத்தரவாதங்களை எழுத்து மூலமாக சரத் பொன்சேகாவிடமிருந்து நாங்கள் பெற்றிருந்தோம். அந்த விடயத்தை நாங்கள் வெளியில் சொல்கின்றபோது சிங்கள மக்கள் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதற்காக நாங்கள் அதனை தவிர்த்திருந்தோம்.

அந்த காலகட்டத்தில் மக்கள் பல்வேறு முகாம்களில் முள்வேலிகளுக்குள் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மக்கள்கூட அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கு மாகாண மக்களைவிட வடமாகாண மக்கள் அதிகளவில் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்த வரலாறும் அந்த தேர்தலில் இருந்தது.

மகிந்த ராஜபக்சவின் கொடூர ஆட்சியை இல்லாமல் செய்ய வேண்டும்,அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றி அதனூடாக அவருக்கு தண்டனை அளிக்கின்ற விடயமாகவே அதனை நாங்கள் பார்த்திருந்தோம். அது சரத் பொன்சேகா மீது கொண்ட பாசமோ பற்றோ அல்ல.

ஆனால் அந்தத் தேர்தலில் எங்கள் முடிவுகளுக்கு மாறாக மகிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றிருந்தார். இருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அவர் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவருடன் 13சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. ஆனால் அவர் பேசிக்கொண்டே எங்களுக்கான தீர்வை இல்லாமல் செய்திருந்தார்.

அதன் பின்னர் கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக சம்பந்தன் ஐயாகூட சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளுடனும் பௌத்த மதகுருமார்களுடனும் பேசி ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவரை ஜனாதிபதியாக கொண்டுவந்திருந்தோம். அவரிடம் நாங்கள் எழுத்து மூலமான எந்தவொரு உத்தரவாதத்தையும் பெறவில்லை. ஆனால் அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வை தருவார் என்ற உத்தரவாதம் முன்னாள் ஜனாதிபதி சந்தரிகா அம்மையார் ஊடாக வழங்கப்பட்டது. அதனால் அவரை ஆதரிக்கவேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது.

அவர் வெற்றி பெற்றதன் பின்னர் இணக்கப்பாட்டு அரசியலில் பல உத்தரவாதங்களை தந்திருந்தார். நூறு நாள் வேலைத்திட்டத்தினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்,கைதிகளை விடுதலை செய்தல்ää தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்குதல் போன்ற பல உத்தரவாதங்கள் தரப்பட்டது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்று எட்டு மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இலங்கை வரலாற்றிலே இரண்டு கட்சிகள் சேர்ந்த ஆட்சியாக நல்லாட்சி அமைந்தது.

பாராளுமன்ற இரண்டாவது அமர்வில் நிர்ணயசபையாக மாற்றப்பட்டு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறுபட்ட சபைகள்ä,குழுக்கள் அமைக்கப்பட்டு சமஷ்டிக்கான அங்கீகாரமுள்ள ஒரு யாப்பு வரையப்பட்டு அது2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட இருந்தது. ஆனால் ஜனாதிபதி அக்டோபர் மாதம் 24ஆம் திகதி தன்னிச்சையாக பாராளுமன்றத்தை கலைத்து தன்னிச்சையாக ஒரு பிரதமரை நியமித்தார்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் 19ஆவது அரசியலமைப்பு சிPர்திருத்தம் கொண்டுவரப்படும்போது ஜனாதிபதியின் அதிகாரங்கள் சில குறைக்கப்பட்டிருந்தன. அந்த விடயம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொண்டுவரப்படவிருந்த அரசியல் யாப்பு சர்திருத்தத்தை தடுக்கும் நோக்கில் அவர் இனவாதியாக இதனை செய்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

கோத்தபாய பற்றிய பல்வேறு விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்துகொண்டிருக்கின்றது. அவர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கட்டளையிட்டவர். அவர் தொடர்பான சில விமர்சனங்கள் சர்வதேச ரீதியிலும் இருக்கின்றன. வடகிழக்கு மக்கள் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கக்கூடிய மனோநிலையில் இன்னும் இல்லை. 2009ஆம் ஆண்டில் அவர் மூலமாகவே முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டது. தமிழ் மக்களால் விரோதியாக பார்க்கப்படக்கூடிய ஒருவர் இப்போது போட்டியிடுகின்றார்.

தமிழ் மக்களை பொறுத்தரை இந்த தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்படுகின்றது.சிலர் இந்த தேர்தலை மக்களிடமே விடுங்கள் என்கின்றனர்,சிலர் கோத்தாவை வீழ்த்துவதற்காக இன்னொருவருக்கு வாக்களியுங்கள் என்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை தேர்தலை பகிஷ்கரிப்பதானது நாங்கள் யாரை வெறுக்கின்றோமோ அவரை ஆதரிப்பதாகவே வரும். ஆகவே நாங்கள் யாரை வெறுக்கின்றோமோ அவரை தோற்கடிப்பதற்காக 2010ஆம் ஆண்டிலே எடுத்த முடிவையே எடுக்க வேண்டி ஏற்படுகின்றது. அதற்காக எந்தவித கோரிக்கையோ உத்தரவாதமோ இன்றி கண்ணை மூடிக்கொண்டு எவரையும் ஆதரிக்க முடியாது. ஏனெனில் நாம் 71வருடங்களாக ஏமாற்றப்பட்டுவரும் இனமாவோம். எமது பிரச்சினையை தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகள் மனச்சாட்சியின்படி அழுத்தம் கொடுத்துவருகின்ற சூழலில் நாங்கள் சில உத்தரவாதங்களை பெறவேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை வேட்பாளர் என்ற ரீதியில் கோத்தாவுடன் நிச்சயமாக அவர்கள் பேசுவார்கள். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருடனும் அநுர குமார திசாநாயக்கவுடனும் பேசவேண்டிய தேவை இருக்கின்றது. இவர்களுள் யார் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான எழுத்து மூலமான உத்தரவாதத்தை தருவார்கள் என்று பார்த்தால் அதனை தரக்கூடிய மனோநிலையில் எவருமே இல்லை.

தாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக எழுத்து மூலமான வாக்குறுதிகளை கொடுக்கின்றபோது அது இனரீதியாக சிங்கள மக்களை தங்களுக்கு எதிராக வாக்களிக்க தூண்டும் என்ற காரணத்தினால் எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரமுடியாது என்ற கருத்துப்படவே அனைவரும் கூறுவார்கள் என நான் கருதுகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சிதான் இனப்படுகொலையை ஆரம்பித்த கட்சியாக இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்ந்து இனப்படுகொலையை செய்த கட்சியாக இருக்கின்றது. மொட்டுக் கட்சியானது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைகளை செய்து சாதனை படைத்த கட்சியாக இருக்கின்றது.

ஜே.வி.பி கட்சியானது 2006ஆம் ஆண்டு வடகிழக்கு இணைப்பை துண்டித்த பெருமைக்குரிய கட்சியாக இருக்கின்றது. இவர்களுள் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முகங்களும் உருவங்களுமே வௌ;வேறாக இருக்கும். கொள்ளைääகுணங்கள் என்பன இனவாதத்தை கொண்டதாகவே இருக்கப்போகின்றன.

தீர்வை தருவார்கள் என இவர்களை நம்பி வாக்களிப்பதில் என்னைப் பொறுத்தவரை நம்பிக்கையில்லை. ஆனால் யார் அதிகமான இனப்படுகொலைகளை செய்திருக்கின்றாரோää அதிக துரோகங்களை செய்திருக்கின்றாரோää மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியிருக்கின்றாரோ அவரை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமானால் அவருக்கு சமமான தேர்;தலில் நிற்கின்ற இன்னொருவரை நாங்கள் ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆதரிப்பது என்பது அவர் மீதுகொண்ட பற்றாக இருக்காது. அவர் தருகின்ற உத்தரவாதமாக இருக்காது.

கம்பிரலிய தருவதற்காகவோ வீடுகட்டித் தருவதற்காகவோ பாதைகளை அமைத்துத் தருவதற்காகவோ அல்லது தையல் இயந்திரங்களை தருவதற்காகவோ இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. அவர் தமிழ் மக்களுக்கான தீர்வை தருகின்ற ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலைப்பாடு நிச்சயமாக வராது. இருந்தாலும் இந்தத் தேர்தலில் எடுக்கின்ற முடிவு என்பது யாரை ஜனாதிபதியாக ஆதரிக்க வேண்டும் என்பதற்கு அப்பால் யாரை ஆதரிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே நாங்கள் வாக்களிக்க வேண்டும்.

யாரை நாங்கள் தோற்கடிக்க வேண்டுமென நினைக்கின்றோமோ அவர் தேர்தலில் வென்றுவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவருடன் பேசாதா,ஒரு பதவியை எடுக்காதா என்ற கேள்வி இருக்கின்றது. நிச்சயமாக நாங்கள் பேசுவோம். எதிரியாக இருந்தாலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எவ்வாறு அதனை கையாளலாம் என்று பேசவேண்டிய தேவை இருக்கின்றது.

வடகிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்ற செய்தியை காட்டவேண்டி இருக்கின்றது. அவர் வெற்றி பெறுவார் அல்லது தோல்வியடைவார் என்பதல்ல செய்தி. நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்திருக்கின்றீர்கள்ää எங்களுக்கு எதிராக செயற்பட்டிருக்கின்றீர்கள்ää முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைகளை செய்திருக்கின்றீர்கள் உங்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற விடயத்தை தமிழ் மக்கள் காட்டவேண்டியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்போது பலர் பலரை ஆதரித்து கருத்துகள் கூறத் தொடங்கியுள்ளார்கள்.அந்த கதைகள்ää அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வமானவை அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிக்குள் கூடி முடிவெடுத்து பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் கூடி முடிவெடுக்கும்.இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பிற்பாடு சம்பந்தன் ஐயா அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு தரப்படும். அதுவே உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையாக இருக்கும். அதுவே இறுதிய முடிவாக இருக்கும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புத்த பிக்கு ஒருவர் மரணித்திருக்கின்றார். பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் அவரை அடக்கம் செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஆலயத்தின் சுற்றுவட்டத்திலே அவரை எரிப்பதோ புதைப்பதோ தடை செய்யப்பட்டு அங்கிருந்து மூன்றுää நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் கடற்கரையை அண்மித்த பகுதியில் அவரது சடலத்தை புதைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அதனை உதாசீனம் செய்து பொதுபலசேனா புத்தபிக்குவுடன் சிலர் சேர்ந்து அவரது உடலை அடக்கம் செய்திருக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயமாகும்.

ஞானசார தேரர் அவர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரி அவர்கள் அவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் இவ்வாறான அடாவடித்தனங்களை தொடர்ந்து செய்வதற்காகவே ஆகும். இப்பிரச்சினைக்காக வாதாடிய தமிழ் சட்டத்தரணிகளை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள்கூட தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நீதிமன்றில் சட்டவாதம் செய்கின்றவர்களை தரித்த ஒரு புத்தபிக்கு நேரடியாக சென்று அடாவடித்தனங்களை செய்கின்ற ஒரு நாடாக ஸ்ரீலங்காவே இருக்கின்றது.

இது பௌத்த நாடு எனவும் இங்கு இந்து மதத்தவர் எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் நாங்கள் எங்கு வேண்டுமென்றாலும் புதைப்போம் என ஒரு பௌத்த பிக்கு கூறுகின்றார். அப்படியாயின் பௌத்த நாட்டிலே ஏன் நீதிமன்றங்களை வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். பௌத்த மதத் துறவிகளே நீதிமன்றத்தை கையிலெடுத்து தீர்ப்புகளை கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்.

இவ்விடயம் தோடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருக்கின்ற விடயம் என்னவெனில் அங்கு கூடியிருந்த மக்கள் புத்தபிக்குகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்தபோதே சட்டத்தரணிகள் தாக்கப்பட்டதாக வேடிக்கையான கருத்தொன்றை கூறியிருக்கின்றார். தாக்கப்பட்டது இரண்டாவது விடயமாகும். அதற்கு முன்பு நீதிமன்றத்தை அவமதித்ததற்கு கோத்தபாய அவர்கள் என்ன பதிலை கூறப்போகின்றார்.

இவ்வாறுதான் இலங்கை அரசாங்கத்தின் போக்கு இருக்கின்றது. ஜனாதிபதியாக யார் வரப்போகின்றார் என்பது எமக்குத் தெரியாது. நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடந்த சம்பவம் மூலமாக தமிழர்கள் தமிழர்கள் தான் சிங்களவர்கள் சிங்களவர்கள் தான் என்கின்ற விடயத்தை புத்தபிக்குகள் காட்டியிருக்கின்றனர். தமிழர்கள் எல்லோரும் ஒன்றுகூடி தீர்வைப் பெறுவதற்காக இவ்விடயத்தை நாங்கள் கையிலெடுக்க வேண்டும் என்பதே இதன் மூலம் எமக்கான செய்தியாக இருக்கின்றது.

Leave a Reply