வடகிழக்கு இந்தியாவில் தேசிய போராட்டங்கள்-ந.மாலதி

பிரித்தானிய காலனியாளர்கள் இந்திய உபகண்டத்திலிருந்து 1947இல் வெளியேறிய பின்னர், தொடர்ந்த ஒரு தசாப்தத்தில் இந்திய உபகண்டம் 14 மாநிலங்களாக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு சில அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. காட்டப்பட்ட இந்திய வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள பகுதியே இந்தியாவின் வடகிழக்கு பிரதேசம். இங்கு அசாம் என்ற ஒரு மாநிலம் மட்டுமே இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்குள்ள பெரும்தொகையான ஏனைய மொழி பேசும் இனங்களும் மாநிலங்கள் கேட்டு போராடினார்கள். ஆனால் அப்போது இவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

இவர்களில் முதலில் தேசிய போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக தொடர்ந்தவர்கள் நாகா மக்கள். அன்றைய அசாம் மாநிலத்தில் ஒரு பகுதியை நாகாலாந்து மாநிலமாகவும் பின்னர் தனிநாடாகவும் பிரிப்பதற்கு தொடர்ந்து போராடுகிறார்கள். பல்வேறு வடகிழக்கு மக்களின் தேசிய போராட்டங்களுக்கு தாய் போராட்டமாக நாக மக்கள் போராட்டம் திகழ்கிறது என்பார்கள். இவர்களின் போராட்டத்தின் பயனாக நாகலாந்து ஒரு மாநிலமாக இன்று பிரிக்கப்பட்டு விட்டது.Picture1 1 வடகிழக்கு இந்தியாவில் தேசிய போராட்டங்கள்-ந.மாலதி

அவர்கள் தொடர்ந்து தனிநாடு கோரி போராடுகிறார்கள். நாகா மக்களின் போராட்டம் உலகிலேயே நீண்ட காலம் நீடிக்கும் போராட்டம் என்கிறார்கள். அவர்களை பின்பற்றி பல்வேறு வடகிழக்கு இனங்கள், மாநில கோரிக்கையை முன்வைத்தும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தும்  ஆயுதப்போராட்டங்கள் நடத்துகின்றன. இப்போராட்ட அமைப்புக்களின் அட்டவணையை இங்கு பார்க்கலாம்.

சிறீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) போலவே வடகிழக்கிலும் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு ஒரு சட்டத்தை (AFSPA) இந்தியா அமுல்படுத்துகிறது. இதே போன்ற ஒரு சட்டம் காஷ்மீரிலும் நடைமுறையில் இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் இராணுவ அதிகாரிகள் வாறன்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்யவும், வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடத்தவும், கூட்டமாக சேர வேண்டாம் என்ற ஆணையை மீறுவோர் மேல் துப்பாக்கி சூடு நடத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இச்சட்டம் இந்த அதிகாரிகளுக்கு அவர்கள் இழைத்த குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்தும் விதிவிலக்கு கொடுக்கிறது. சிறிலங்காவின் சட்டம் போலவே இருக்கிறதல்லவா?

 மணிப்பூரின் மலோம் படுகொலையும் ஐரோம் சர்மிளாவும்

இம்மாதிரியான சட்டம் இருக்கும் போது தமிழீழத்தில் நடந்தது போலவே வடகிழக்கிலும் படுகொலைகளுக்கு பஞ்சமில்லை. 2000ம் ஆண்டு நவம்பர் 2ம் திகதி மணிப்பூரில் உள்ள மேலோம் பேருந்து தரிப்பு நிலயத்திற்கு அருகில் ஒரு இராணுவ வாகன தொடர்மீது தாக்குதல் நடந்தது. இதற்கு பழிவாங்கலாக இராணுவம் அவ்விடத்தை சுற்றி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. 10 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து கிராமத்தினுள் நுழைந்த இராணுவத்தினர், கிராமத்தவர்களை துப்பாக்கிமுனையில் நடத்திச் சென்று நிலத்தில் படுக்கச்செய்தனர்.court orders release of manipuri activist irom sharmila 600 09 1470693517 வடகிழக்கு இந்தியாவில் தேசிய போராட்டங்கள்-ந.மாலதி

இப்படுகொலையை தொடர்ந்து, அப்போது 28 வயதாக இருந்த ஐரோம் சர்மிளா என்ற பெண் AFSPA சட்டத்தை நீக்குமாறு கோரி தண்ணீரும் அருந்தாத உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். தற்கொலைக்கு முயற்சிக்கிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டு இவர் கைது செய்யப்பட்டு குழாய் மூலம் இவருக்கு உணவு ஊட்டப்பட்டது. அன்றிலிருந்து இவர் பல தடவைகள் கைதுசெய்யப்பட்டும் விடுதலை செய்யப்பட்டும் வருகிறார். அரசின் கொடுமைகளுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தின் குறியீடாக இன்று சர்மிளா போற்றப்படுகிறார்.

வடகிழக்கின் மேலதிக பின்னணி

பிரித்தானிய காலனிய காலத்திலேயே பாதுகாப்பிற்கான “முன்னணி எல்லையாக” வடகிழக்கு பார்க்கப்பட்டது. இதனால் இது “தவிர்க்கப்பட வேண்டிய”, “வளர்ச்சியற்ற”, “அதிதூரத்திலுள்ள” இடமாகவே கையாளப்பட்டது.  பின்னரும் இந்திய மத்திய அரசால் அவ்வாறே கையாளப்பட்டது, படுகிறது.

இந்த வடகிழக்கு பகுதி மக்கள் ஒரு போதும் இந்திய அரசியல்வாதிகளின் பின்னால் ஒருங்கிணையவில்லை. அதனால் இவர்களுக்கு இந்திய ஆட்சி ஒரு வெளியார் ஆட்சியாக, இன்னுமொரு காலனியாளர் ஆட்சியாகவே தோன்றுகிறது. பாகிஸ்தான் பிரிவினைக்கு முன், வங்காளம் (அன்று கிழக்கு பாகிஸ்தான்), மியன்மார் மற்றும் வடகிழக்கு ஒருங்கிணைந்த ஒரு பொருளாதார-சந்தை வலயமாக இருந்து வந்துள்ளது. பாகிஸ்தான்-வங்காளம் பிரிவினைக்கு பின்னர், வங்காளத்திற்கும் வடகிழக்கிற்கும் இருந்த தொடர்பு அறுபட்டுவிட்டது. முன்னர் ஒருங்கிணைந்த வலயமாக இருந்த பிரதேசம் வேற்று நாட்டு எல்லைகளால் பிரிக்கப்பட்டு இப்போது வங்காளம், சீனா, மியன்மார் போன்ற நட்புறவற்ற நாடுகளிடையே கூறுபோடப்பட்டுள்ளது.

வடகிழக்கு அசாம்தவிர்ந்த வடகிழக்கு  
மக்கள் தொகை 38 மில்லியன் 12 மில்லியன்
இந்துக்கள் 58% 39%
இஸ்லாமியர்கள் 23% 5%
கிறிஸ்தவர்கள் 16% 46%
பழங்குடி சமயங்கள் 2% 7%
ஏளையவை 1% 3%

வடகிழக்கு மக்கள் தோற்றத்திலும் வடஇந்தியர்கள் போலல்லாமல் தென்கிழக்காசிய மக்களை போலிருப்பார்கள். வடகிழக்கு மக்களிடையேதான் அதிகமான விகிதாசாரத்தில் (30 வீதம்) பழங்குடி மக்கள் உளள்ளார்கள். திரிபுரா மற்றும் அசாம் தவிர்ந்த ஏனைய 5 மாநிலங்களில் பழங்குடி மக்கள் 60 விகிதாசாரத்தில் உள்ளார்கள். இதுவும் ஏனைய இந்தியாவில் இருந்து இவர்களை வேறுபடுத்துகிறது. காலனிய காலத்தில் இவர்களிடையே கிறிஸ்தவ மதம் அதிகம் பரவியது. அட்டவணையில் காட்டப்படுவது போல இதிலும் இவர்கள் ஏனைய இந்தியாவிலிருந்து வேறுபடுகிறார்கள்.manorama 360 வடகிழக்கு இந்தியாவில் தேசிய போராட்டங்கள்-ந.மாலதி

வடகிழக்கு மக்களின் போராட்டங்களால் 1963இல் நாகாலாந்து மாநிலம் முந்தைய அசாம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டதை தொடர்ந்து அசாம் மாநிலம் மேலும் பிரிக்கப்பட்டு இன்று ஏழு மாநிலங்களாக உள்ளன. மணிப்பூர், திரிபுரா மற்றும் மேகாலயா 1972 இலும், அருணாசலப் பிரதேசம் 1975 இலும், மிசோரம் 1987 இலும் மாநிலங்களாயின.

இந்திய தேசிய போராட்டங்கள் பற்றிய போராட்ட ஆதரவு ஆக்கங்கள் கீற்று மற்றும் வினவு போன்ற தமிழ் நாட்டு இணைய தளங்களில் தமிழிலும் படிக்க கிடைக்கின்றன. வடகிழக்கு போராட்டங்கள் பற்றிய பின்வரும் இரண்டு ஆக்கங்களும் படிக்க வேண்டியவை.

  “இந்தியனே வெளியேறு” – வடகிழக்கின் விடியலுக்கான முழக்கம்

பயங்கரவாதமும் இந்திய அரசும் – வரலாற்றுப் படிப்பினைகள்

 ஐரோப்பிய காலனியமும் தேசிய போராட்டங்களும்

500 ஆண்டுகள் நீடித்த ஐரோப்பிய காலனியம் ஒட்டுமொத்த உலகை எவ்வாறு புரட்டிப்போட்டது என்பதற்கு வடகிழக்கும் ஒரு நல்ல உதாரணம். காலனியாளர்களின் வசதிக்கேற்ப வடகிழக்குடன் இணைந்த பரந்த பொருளாதார வலய பிரதேசம் இன்று மியன்மார், பாகிஸ்தான், வங்காளம் என்ற இன்றைய நாடுகளின் எல்லைகளால்  துண்டாடப்பட்டுள்ளது. இது போலவே தமிழ்நாடு ஈழத்தமிழர் இணைந்த பொருளாதார வலயம் இந்தியா சிறிலங்கா என்ற இருநாட்டின் எல்லைகளால் துண்டாக்கப்பட்டது. இவ்வாறு துண்டாடப்பட்ட பின்னர், அன்றைய மக்களின் பொருளாதார செயற்பாடுகளுக்கு கள்ளக்கடத்தல் என்ற பெயரும் சூட்டப்பட்டது. குர்தீஸ் மக்களின் நிலமும் இவ்வாறே ஐந்து நாடுகளிடையே துண்டாடப்பட்டது.

இந்தியா 1,324,009,090
பாகிஸ்தான் 202,785,000
வங்காளம் 158,762,000
மியன்மார் 56,480,000
ஆப்கானிஸ்தான் 37,521,000
நேபால் 28,038,000
சிறிலங்கா 22,480,000
புட்டான் 760,000
மாலைதீவு 345,000
மொத்தம் 1,831,180,090

 

காலனியம் உருவான ஐரோப்பாவில் ஒவ்வொரு மொழி பேசும் இனத்திற்கும் ஒரு நாடு உள்ளது. கட்டலான் மற்றும் பாஸ்க் தேசம் தவிர இன்று அங்கு தேசிய போராட்டங்கள் மிகவும் குறைவு. பிரித்தானியா ஆட்சி செய்யும் ஸ்கொட்லாந்தும் வேல்ஸ்சும் பிரிந்து போவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. அயர்லாந்தின் வடக்கு பிரதேசம் மட்டுமே ஒரு மாபெரும் போராட்டத்தின் பின் ஓய்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 600 மில்லின் மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ளது 50 ஐரோப்பிய நாடுகள். ஆபிரிக்காவிலும் கூட 1200 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது 55 நாடுகள். இவற்றோடு 8 தெற்காசிய நாடுகளின் மக்கள் தொகையை ஒப்பிட்டால் இங்கு ஏன் அதிக தேசிய போராட்டங்கள் தொடர்கின்றன என்பதற்கு ஒரு விளக்கம் கிடைக்கிறது. இதனாலோதான் ஐரோப்பிய காலனியம் தங்கள் வசதிக்கேற்ப உலகெங்கும் உருவாக்கிய காலனிகளில் இன்றும் தியாகங்களும் வீரங்களும் நிறைந்த போராட்டங்கள் தொடர்கின்றன.

 

Leave a Reply