லிபியா உள்நாட்டுப் போர் –குழுக்களுக்கிடையில் போர் நிறுத்தம்

லிபியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த இரு குழுக்களுக்கிடையில்   போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தி,கருத்து தெரிவித்த ஐ.நா. தூதர் ஸ்டெஃபானி டர்கோ வில்லியம்ஸ்,

‘லிபியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த இரு குழுக்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவது, நாட்டின் அமைதியையும் நிலைத்தன்மையையும் நோக்கிய மிக முக்கிய திருப்பமாகும். இந்த ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிக நீண்ட காலம் பாடுபட்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் நம் கண் முன் உள்ள சவாலாகும்’ என கூறினார்.

லிபியாவை நீண்ட காலம் ஆண்டு வந்த கடாஃபி, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல்வேறு குழுக்களும் தங்களுக்குள் சண்டையிட்டு வந்தன.

தற்போது தலைநகர் திரிபோலியைத் தலைமையகத்தைக் கொண்டு, ஐ.நா. ஆதரவு பெற்ற பொது தேசிய நாடாளுமன்றம் (ஜிஎன்ஏ) நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வருகிறது. கிழக்கே நாட்டின் பெரும்பான்மையான பகுதியை தேசிய ஒப்பந்த அரசு ஆண்டு வருகிறது.

இந்த இரு அரசுகளுக்கும் ஆதரவான படையினரும், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.