லிபியாவில் புயல் அனர்த்தம் – 11,000 பேர் பலி

லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மற்றும் திங்கட்கிழமைகளில் (11) இடம்பெற்ற புயல் மற்றும் கடும் மழை காரணமாக இரு ஆறுகளின் அணைகள் உடைப்பெடுத்ததால் இது வரை 11,300  பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பல ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லிபியாவின் வடகிழக்கில் உள்ள டெர்னா என்ற நகர் உட்பட பல நகரங்கள் கடுமையான அழிவுகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெர்னா நகரம் லிபியாவின் பென்ஹாசி என்ற நகரத்தில் இருந்து 300 கி.மீ தூரத்தில் உள்ளது. 100,000 மக்கள் தொகையை கொண்ட இந்த நகரமே மிகப்பெரும் அழிவை சந்தித்துள்ளது.

இந்த அனர்த்ததினால் பெருமளவான உடைமைகள் சேதமடைந்ததுடன், 30,000 பேர் தமது வீடுகளை அழந்துள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களிடம் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் லிபியாவின் செஞ்சிலுவைச்சங்கம் கடந்த புதன்கிழமை (13) தெரிவித்துள்ளது.

இதுவரையில் 8,000 மரணங்களை பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சூழல் மாசடைவதால் பூமி வெப்பாமாகி வருவதாகவும், அதனால் கடல் மட்டத்தின் வெப்பநிலை உயர்வதால் புயல் மற்றும் கடுமையான மழை வீழ்ச்சி என்பன பல நாடுகளில் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.