மேற்கு லண்டனில் ஆப்கானிஸ்தான் அகதியொருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலிலுள்ள வீதியில் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயதுடைய ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது இந்த இளைஞர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இலங்கைத் தமிழரான 18 வயதுடைய வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இல்யாஸ் சுலைமான் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, வனுஷன் பாலகிருஷ்ணனுக்கு 24 ஆண்டுகளும் சுலைமானுக்கு 21 ஆண்டுகளும் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ரிஷ்மீத்தும் அவரது தாயாரும் பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்தமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.