ராஜிதவை சிறைக்கு கொண்டு செல்ல வந்த அம்புலன்ஸ் திரும்பிச்சென்றது

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பாதுகாப்புடன் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் நேற்று தனியார் வைத்தியசாலைக்குச் சென்று ராஜிதவை மருத்துவ சோதனைக்குட்படுத்திய பின்னர் அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லமுடியும் என்று தெரிவித்திருந்தார்.

அவ்வாறு அழைத்துச் செல்வதற்கு முன்னர் ராஜிதவுக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர்களின் அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜிதவை அழைத்துச் செல்வதற்காக நேற்று நண்பகல் 12 மணியளவில் அம்புலன்ஸ் வாகனத்துடன் சிறைச்சாலை அதிகாரிகள் தனியார் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.

ஆயினும் இருதய மருத்துவ நிபுணர் ஒருவர் இல்லாமல் ராஜிதவை சிறைச்சாலைக்குக்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாதென தனியார் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துவிட்டனர்.இதனால் நேற்று ராஜித வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை

ராஜிதவை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த அம்புலன்ஸு டன் சிறைச்சாலை அதிகாரிகளும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.